கிரிக்கெட்டில் வீரர்களுக்கு காயம் ஏற்படுவது சஜகம்தான் என்று இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. இவரது பவுலிங் ஸ்டைல் வித்தியாசமானது. இவரது பந்துவீச்சு ஆக்ஷனை பலர் பராட்டியும் சிலர் விமர்சித்தும் வருகின்றனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் அக்யூப் ஜாவேத், ‘பும்ரா, வழக்கத்துக்கு மாறாக பந்துவீசுகிறார். இந்த வித்தியாசமான பந்துவீச்சு ஆக்ஷனால் அவருக்கு அடிக்கடி காயம் ஏற்பட வாய்ப்புள்ளது’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் மும்பையில் நடந்த விழா ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம் இதுபற்றி கேட்டபோது, ‘கிரிக்கெட் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்து வதில்லை. எனக்கு என்ன உதவியாக இருக்குமோ அதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். கிரிக்கெட்டில், சரியான ஆக்ஷன் என்று எதுவும் இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பந்துவீசுகிறார்கள். என்னைப் போல் இருக்கிற வேகப்பந்துவீச்சாளர்கள் யார்தான் காயம் அடையாமல் இருக்கிறார்கள். காயம் ஏற்படுவது சகஜம். உடல் தகுதியை சரியாக கவனித்துக் கொள்வதில் என் கவனம் இருந்துகொண்டிருக்கிறது’ என்றார்.
அடுத்து ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டெஸ்ட் தொடர் பற்றி கேட்டபோது, ‘அதற்கு இன்னும் நாள் இருக்கிறது. அடுத்து என்ன போட்டி இருக்கிறதோ அதைப்பற்றிதான் கவனம் செலுத்துவேன். அதுதான் என் பாலிசி. ஆஸ்திரேலிய தொடரை பொறுத்தவரை அங்கு சென்ற பிறகு, ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொண்டுதான் என்ன செய்யலாம் என்று பார்க்கவேண்டும். இப்போதே ஒன்றைப் புரிந்துகொண்டு சென்றால், அங்கு வேறு மாதிரி இருக்கலாம்.
இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருணுடன் தொடர்பில் இருக்கிறேன். அவர் கொடுக்கும் ஆலோசனைகள் எனக்கு உதவியாக இருக்கிறது. என்னை மெருகேற்றி கொள்ள அது உதவுகிறது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் நான் விளையாடியபோதே எனது பந்துவீச்சு பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும்.
பலம், பலவீனம் தெரிந்த, அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர் உங்களுக்கு இருப்பது எப்போதும் நல்லது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் எனக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இது நல்லதுதான். ஓய்வில் இருந்து திரும்பும்போது விக்கெட் எடுக்க வேண்டும் என்ற பசியும் வந்து சேரும்’ என்றார்.