மேக்ஸ்வெல்லை மிரள வைத்த ‘யார்க்கர்’ - டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என நிரூபித்த பும்ரா!

மேக்ஸ்வெல்லை மிரள வைத்த ‘யார்க்கர்’ - டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என நிரூபித்த பும்ரா!
மேக்ஸ்வெல்லை மிரள வைத்த ‘யார்க்கர்’ - டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என நிரூபித்த பும்ரா!
Published on

இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி கான்பரா மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்களை குவித்தது. தொடர்ந்து அந்த இலக்கை ஆஸ்திரேலியா விரட்டியது. 

முதல் இரண்டு போட்டிகளிலுமே 350 ரன்களுக்கு மேல் ஆஸ்திரேலிய அணி குவித்து இருந்ததால் இந்த ஸ்கோரை சேஸ் செய்வதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருந்தது. அந்த அளவிற்கு ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் பலம் இருக்கிறது. இந்திய அணியின் பந்துவீச்சும் முந்தைய போட்டிகளில் மிக மோசமாக இருந்தது. இருப்பினும், நடராஜன் அணியில் இடம்பெற்றதால் பந்துவீச்சில் சிறப்பான தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்த்தது போலவே நடராஜனும் சிறப்பாக பந்துவீசி முதல் பவர் ப்ளேவில் ஆஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட்டை சாய்த்தார். ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க வீரர்களின் சிறப்பான ஆட்டமே அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. முதல் இரண்டு போட்டிகளிலுமே 100 ரன்களுக்கு மேல் வார்னரும், ஆரோன் பின்சும் பார்ட்னர் ஷிப் அமைத்தனர். இந்தப் போட்டியில் அதனை உடைத்தார் நடராஜன்.

லபுஷேன், ஸ்மித், ஹென்ரிக்ஸ், ஃபின்ச், கேமரூன் க்ரீன் மாதிரியான பேட்ஸ்மேன்கள் சீரிய இடைவெளியில் விக்கெட்டை இழந்த போதும் பின்ச் அரைசதம் கடந்தார். பின்ச் ஆட்டமிழந்த போது இந்தியாவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியான நிலையில் ஒற்றையாளாக ஆஸ்திரேலியாவை வெற்றியின் பக்கமாக திரும்பியிருந்தார் மேக்ஸ்வெல். அதிரடியாக விளையாடி இந்திய பவுலர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். சிக்ஸர்களாக பறக்கவிட்டார். நடராஜன் ஓவரை ஒரு கைபார்த்தார். நடராஜன் வீசிய 44 ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர் இரண்டு பவுண்டரிகளை பறக்கவிட்டார். அரைசதமும் அதிரடியாக கடந்தார். அதனால், வெற்றி வாய்ப்பு ஆஸ்திரேலிய அணியின் பக்கம் சென்றது. 

இந்த நிலையில்தான், 45வது ஓவரை வீசினார் பும்ரா. 38 பந்துகளில் 59 ரன்களை குவித்த நிலையில் பும்ரா வீசிய அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் க்ளீன் போல்டானார் மேக்ஸ்வெல்.  அதுஒரு அற்புதமான யார்க்கர் பந்து. ஸ்டம்களை தெறிக்கவிட்டது அந்த பந்து. தான் ஒரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்தார் பும்ரா. அதுவும் இக்கட்டான ஒரு நேரத்தில் இப்படியான ஒரு பெரிய விக்கெட்டை வீழ்த்தி இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

அற்புதமாக யார்க்கரை வீசி மேக்ஸ்வெல்லை காலி செய்து இந்தியாவுக்கு அதன் மூலம் வெற்றியை தேடி கொடுத்தார். 9.3 ஓவர்கள் வீசி 43 ரன்களை விட்டுக் இரண்டு விக்கெட்டுகளையும் பும்ரா இந்த ஆட்டத்தில் வீழ்த்தி இருந்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com