2022ம் ஆண்டுக்கான கால்பந்து உலகக்கோப்பை போட்டி நேற்றுடன் நடந்து முடிந்திருக்கிறது. பரபரப்பான போட்டியாக மாறி ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிற வைத்தது ஃபிஃபா கால்பந்து போட்டி.
கத்தார் நாட்டில் கடந்த நவம்பர் 20ம் தேதி தொடங்கிய ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை போட்டியை ஃபுட்பால் ரசிகர்கள் பெரும் ஆவலோடு உற்சாகம் குறையாமல் பார்த்து வந்தார்கள். இப்படி இருக்கையில் ஒவ்வொரு கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளையும் நேரில் சென்று பார்த்ததன் மூலம் ரசிகர் ஒருவர் உலக சாதனை படைத்திருக்கும் நிகழ்வும் நடந்திருக்கிறது.
அதன்படி பிரேசிலை சேர்ந்த டேனியல் ஸ்புரூசி என்ற நபர்தான் கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இணைந்திருக்கிறார். பிரேசிலின் சா பாலோவில் உள்ள டவுபேட் பகுதியைச் சேர்ந்தவர் டேனியல் ஸ்புரூசி. 1978ம் ஆண்டு அர்ஜென்டினாவில் நடந்த உலகக் கோப்பை கால்பாந்து போட்டியை நேரில் சென்று பார்க்கத் தொடங்கிய டேனியல் கிட்டத்தட்ட 44வது ஆண்டுகளாக ஃபிஃபா கால்பந்து போட்டிகளை பார்த்து வந்திருக்கிறார்.
இத்தனை ஆண்டுகளில் 1982ல் ஸ்பெயினில் நடந்த ஃபிஃபா ஃபுட்பால் போட்டியை மட்டுமே டேனியல் தவறவிட்டிருந்தாலும் மற்ற காலங்களில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியை அவர் நேரில் பார்த்திருந்ததால் டேனியல் ஸ்புரூசி கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்.
75 வயதாகும் டேனியல் ஃபிஃபா கால்பந்து போட்டியை காண்பதற்காக ஒரு டஜன் நாடுகளுக்கும் மேல் பயணித்து அந்த நாட்டின் கலாசாரங்களை கண்டு வியந்ததோடு, தன்னை ஒரு மணமகள் போல அலங்கரித்துக்கொண்டு தனது நாட்டு பாரம்பரியத்தையும் உலகக் கோப்பை போட்டிகளில் பதிவு செய்து நினைவலைகளாகவும் விட்டுச் சென்றிருக்கிறார் டேனியல்.
ALSO READ:
இது குறித்து கின்னஸ் நிர்வாகத்திடம் பேசியிருக்கும் டேனியல் ஸ்புரூசி, “யார் வேண்டுமானலும் செல்லலாம் (Bloco Vai Quem Quer) என்பதன் படி, இதனை ஒரு திருவிழாவாக கருதுகிறேன். கார்னிவல் என்ற திருவிழா சமயத்தில் ஆண் ஒருவர் பெண்ணை போல உடையணிந்து அணிவகுப்பதும், சாலைகளில் நடப்பதும் ஒரு பாரம்பரிய பண்பு. பிரேசிலின் இந்த சுவாரஸ்ய கலாசாரத்தை உலகத்துக்கு தெரியப்படுத்த விரும்பினேன்.” எனக் கூறியிருக்கிறார்.
இப்படி இருக்கையில், கத்தாரில் நடந்து முடிந்த கால்பந்து போட்டியின் போது மட்டும்தாம் டேனியல் அந்த உடை கலாசாரத்தை பின்பற்றியிருக்கவில்லை. ஏனெனில் கத்தார் நாட்டில் போடப்பட்டிருந்த கட்டுப்பாடு காரணமாக அதனை தவிர்த்திருக்கிறார்.
இதற்கு அடுத்து 2026ம் ஆண்டு கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இணைந்து நடந்த இருக்கும் ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியிலும் தான் பங்கேற்கப் போவதாகவும் கூறியிருக்கிறார் டேனியல். மேலும், “இதுப்போன்ற உலகக் கோப்பை போட்டிகளில் பலரும் பங்கேற்று மற்ற நாடுகளின் கலாசாரம், அறிவு, சுற்றுச்சூழல், ஒற்றுமை போன்றவற்றை தெரிந்துக்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் என்னுடைய சாதனையை வேறு யாராவது முறியடிப்பார்கள் என நம்புகிறேன்.” என்றும் டேனியல் தெரிவித்திருக்கிறார். இதுவரை டேனியல் ஸ்புரூசி 11 ஃபிஃபா உலகக்கோப்பை போட்டிகளை நேரில் கண்டு ரசித்திருக்கிறாராம்.
ALSO READ: