பிராவோ சகோதரர்கள் அதிரடி: த்ரில் வெற்றி பெற்றது நைட் ரைடர்ஸ்!

பிராவோ சகோதரர்கள் அதிரடி: த்ரில் வெற்றி பெற்றது நைட் ரைடர்ஸ்!
பிராவோ சகோதரர்கள் அதிரடி: த்ரில் வெற்றி பெற்றது நைட் ரைடர்ஸ்!
Published on

கரீபியன் லீக் டி20 போட்டியில் பிராவோ சகோதரர்களின் அதிரடியால் ட்ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீசில் நடக்கும் கரீபியன் பிரிமியர் லீக் டி20 (சிபிஎல்) தொடரின் 12-வது போட்டி நேற்று நடந்தது. இதில் ஆண்ட்ரு ரஸல் தலைமையிலான ஜமைக்கா தல்லாவாஸ் அணியும் பிராவோ தலைமையிலான ட்ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. முதலில் ஆடிய ஜமைக்கா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் கிளன் பிலிப்ஸ் (நியூசிலாந்து) 55 பந்தில் 80 ரன்களும் டேவிட் மில்லர் (தென்னாப்பிரிக்கா) 34 பந்தில் 72 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணி, 6 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. அந்த அணியின் கேப்டன் டிவைன் பிராவோவும் அவரது சகோதரர் டேரன் பிராவோவும் இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். டேரன் பிராவோ 35 பந்தில் 50 ரன்கள் எடுத்து அவுட் ஆன நிலையில், தோல்வியை நோக்கி சென்றுகொண்டிருந்தது அணி. கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 45 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களமிறங்கிய டிவைன் பிராவோ, சண்டோக்கி பந்தில் தொடர்ந்து 3 சிக்சர்களை விளாசி பரபரப்பை ஏற்படுத்தினார். 

இதையடுத்து 2 ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் அபாரமாக ஆடிக்கொண்டிருந்த முன்றோ ஆட்டமிழந்தார். அவர் 51 பந்தில் 67 ரன்கள் எடுத்தார். இதனால் பதற்றம் தொற்றிக்கொண்டது. கடைசி ஓவரை தாமஸ் வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் பிராவோ அவுட். மறுமுனையில் சியர்லஸ் நின்றார். இப்போது கடைசி 2 பந்தில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்த பந்தில் 2 ரன்கள் கிடைத்தது. கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. சியர்ஸ் அந்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இதையடுத்து அந்த அணி த்ரில் வெற்றி பெற்றது. 


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com