கிரிக்கெட் விதிமுறைகளுக்கு புறம்பாக இருப்பதால் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயாவுக்கு ஐசிசி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இலங்கை அணியின் முக்கியமான இளம் சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா. இலங்கையின் டெஸ் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் தவிர்க்க முடியாத வீரராக அறியப்படுகிறார். 25 வயதான அகிலா தனஞ்ஜெயா இதுவரை ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும், 30 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அண்மையில் இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றது. அதில் முதல் டெஸ்ட் போட்டியில் அகிலா தனஞ்ஜெயா விளையாடினார். அப்போது அவரது பவுலிங்கை கவனித்த கள நடுவர்கள், பவுலிங் முறையில் சந்தேகம் எழுப்பினர். இதனையடுத்து தனஞ்ஜெயாவின் பந்துவீச்சு குறித்து ஆய்வு செய்ய ஐசிசி முடிவெடுத்தது. அதன்படி பிரிஸ்பேனில் உள்ள நேஷனல் கிரிக்கெட் செண்டரில் அவருடைய பந்துவீச்சு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
அகிலா தனஞ்ஜெயா பவுலிங் போடும்போது பெரும்பாலான நேரங்களில் அவருடைய முழங்கை ஐசிசியால் அனுமதிக்கப்பட்ட அளவான 15 டிகிரிக்கு மேல் வளைவது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர், சர்வதேசப் போட்டிகளில் பந்துவீசுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய பந்துவீச்சு முறையை மாற்றிக்கொண்ட பிறகு மறு ஆய்வுக்கு தனஞ்ஜெயா விண்ணப்பிக்கலாம். அதுவரை அவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.