”பவுலர்கள் காயமடைவதை தவிர்க்க இதை செய்யுங்கள்!” - கபில் தேவ் கூறும் அறிவுரை

”பவுலர்கள் காயமடைவதை தவிர்க்க இதை செய்யுங்கள்!” - கபில் தேவ் கூறும் அறிவுரை
”பவுலர்கள் காயமடைவதை தவிர்க்க இதை செய்யுங்கள்!” - கபில் தேவ் கூறும் அறிவுரை
Published on

சமீபகாலமாகவே இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து காயத்தால் அவதியடைந்து வருகின்றனர். காயம் அடைவதிலிருந்து வேகப்பந்துவீச்சாளர்கள் தப்பிக்க இதை செய்யவேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார் இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ்.

இந்திய வேகப்பந்துவீச்சாளர்களான ஜஸ்பிரிட் பும்ரா, முகமது ஷமி, தீபக் சாஹர், ஹர்சல் பட்டேல் உள்ளிட்டோர் தொடர்ந்து காயமடைந்து போட்டிகளில் பங்கேற்க முடியாமல் தொடர் இடைவெளியில் அவ்வவ்போது இருந்து வருகின்றனர். முக்கியமாக கடந்த வருடம் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, ஜஸ்பிரிட் பும்ரா தொடர் சிகிச்சையில் இருந்துவருகிறார். மேலும், முகமது ஷமி தோள்பட்டை காயத்திலிருந்து மீண்டுவந்து தற்போது தான் விளையாடி வருகிறார்.

காயம் காரணமாக டி20 உலகக்கோப்பையில் விளையாடாத பும்ரா, ஜடேஜா, தீபக் சாஹர்!

கடந்த 12 மாதங்களாக இந்திய அணி பவுலர்கள் தொடர் காயத்தை சந்தித்து வருகிறார்கள். அதில் முக்கியமாக வேகப் பந்துவீச்சாளர்கள் இருந்துவருகின்றனர். முக்கியமாக ஆசியகோப்பைக்கு முந்தைய இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்ட இந்திய நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா, 2022 ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பைகளை நழுவ விட்டார்.

மேலும் ஆசிய கோப்பையில் ஹாங்ஹாங் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட முழங்கால் காயத்தால் ரவீந்திர ஜடேஜாவும், டி20 உலகக்கோப்பையை நழுவ விட்டார். மற்றும் பிட்னஸ் பிரச்சனை காரணாமாக பும்ரா இல்லாத நிலையிலும், தீபக் சாஹர் அணியில் எடுக்கப்படாமல் இளம் வீரர்களுடன் இந்திய அணி டி20 உலகக்கோப்பையில் விளையாடியது.

டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தப் பிரச்னை இந்திய அணியை பெரிதும் பாதிப்பிற்குள் கொண்டு சென்றது. ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாத நிலையில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து, இறுதிப்போட்டிக்குள் செல்லாமல் வெளியேறியது இந்திய அணி.

அணிக்குள் எடுக்கப்பட்டும் வெளியேற்றப்பட்ட ஜடேஜா, பும்ரா!

தற்போது 2023 ஒருநாள் உலகக்கோப்பை நெருங்கிவரும் நிலையில், இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளரான பும்ரா, இந்திய அணிக்குள் இடம்பெறாமல் இருந்து வருகிறார். இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பும்ராவின் பெயர் சேர்க்கப்பட்டாலும், பின்னர் அவர் முழுமையாக தயாராகவில்லை என அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜடேஜா பங்குபெற்று இருக்கும் நிலையில், அவர் தனது உடல்தகுதியை நிரூபிக்க வேண்டும் என முதல்தர போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பவுலர்கள் 30 பந்துகள் தான் வீசுகின்றனர்- கபில்தேவ்

இந்நிலையில் இந்திய பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து காயமடைவதற்கு காரணம் இடைவிடாத போட்டிகள் தான் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ். இதுகுறித்து கூறுகையில், “ தற்போது வீரர்கள் தொடர்ந்து 10 மாதங்களுக்கு மேலாக போட்டிகளில் விளையாடி வருகின்றனர். நீங்கள் எவ்வளவு அதிகமாக விளையாடுகிறீர்களோ, அதே அளவு காயத்திற்கு உள்ளாகும் நிலைமைக்கும் தள்ளப்படுவீர்கள். உண்மையில் கிரிக்கெட் விளையாடுவது என்பது எளிதான விசயமாக இருப்பதில்லை. நீங்கள் பல்வேறு விதமான மைதானங்களில் விளையாடுகிறீர்கள், கடினமானதாகவும், மென்மையான ஒன்றாகவும், குளிர் மற்றும் வெப்பமான ஆடுகளங்களிலும் விளையாடுகிறீர்கள். அனைத்து சூழ்நிலைகளுக்கும் தகுந்தவாறு உங்களது தசைகள் இயங்க வேண்டும். அப்போது உங்களுக்கு காயம் ஏற்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், காயம் ஏற்படுவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி கூறியிருக்கும் கபில்தேவ், “ காயமடைவதைத் தவிர்க்க அவர்கள் என்ன செய்யலாம்? என்றால் அதற்கான சிறந்த தீர்வு பந்துவீசுவது மட்டுமே, அதில் கவனமாக இருந்தால், அவர்கள் உடல் தகுதியை சீராக வைத்துகொள்ள முடியும். இப்போதெல்லாம் வலைப்பயிற்சிகளில் வெறும் 30 பந்துகளை மட்டும் தான் பவுலர்கள் வீச அனுமதிக்கப்படுகின்றனர். அதுவும் காயமடைவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. அதனால் நீங்கள் அதிகமாக பந்துவீசி பழக்க வேண்டும், எந்தளவு அதிகமாக பயிற்சியில் ஈடுபடுகிறீர்களோ அந்தளவு உங்களுடைய தசைகள் வலுப்பெற ஆரம்பிக்கும். அது நடக்காத சூழலில் நீங்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடும் போது அழுத்தமான நிலையில், உங்களுக்கு காயங்கள் ஏற்பட வழியாக அமைகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com