குடிசை வீட்டில் இருந்து புறப்பட்டு கால்பந்தாட்ட உலகை ஆளும் லூகா மோட்ரிச் பிறந்த தினம்..!

குடிசை வீட்டில் இருந்து புறப்பட்டு கால்பந்தாட்ட உலகை ஆளும் லூகா மோட்ரிச் பிறந்த தினம்..!
குடிசை வீட்டில் இருந்து புறப்பட்டு கால்பந்தாட்ட உலகை ஆளும்  லூகா மோட்ரிச் பிறந்த தினம்..!
Published on

கால்பந்தாட்டம் என்றாலே மெஸ்ஸி, ரொனால்டோ தான் கெத்து என சொல்லி வந்த ரசிகர்களின் பார்வையை தனது பக்கமாக திருப்பிய இந்த நூற்றாண்டின் தலைசிறந்த கல்பந்தாட்ட வீரர்களில் ஒருவர் தான் குரோஷிய கால்பந்தாட்ட அணியின் கேட்பன் லூகா மோட்ரிச். அவருக்கு இன்று பிறந்த நாள். 

குரோஷிய நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மலை கிராமங்களில் ஒன்றான மோட்ரிச்சியில் இருந்த குடிசை வீடுகளில் லூகா மோட்ரிச்சின் வீடும் ஒன்று. சுதந்திர வேட்கையோடு குரோஷிய பகுதி மக்கள் அக்கம் பக்கத்து நாடுகளோடு போர் புரிந்து கொண்டிருந்த சமயத்தில் ஒரு குடிசை வீட்டின் மூத்த பிள்ளையாக 1985இல் பிறந்தார் லூகா மோட்ரிச். 

செர்பிய நாட்டு படையினர் லூகாவின் குடிசைக்கு தீ வைக்க ஒட்டுமொத்த குடும்பமும் உள்நாட்டு அகதிகளாக மாறி புகலிடம் தேடி பல கிலோ மீட்டர் தூரமுள்ள ஜாடர் நகரை நோக்கி நடைபயணமாக வந்துள்ளனர். அந்த நகரம் அவர்களுக்கு அரவணைப்பு கொடுத்துள்ளது. அகதிகள் அனைவருக்கும் பணி, படிப்பு என சகல வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது. 

லூகாவும் பள்ளிக்கூடம் சென்று பாடங்களை படித்து வந்துள்ளார். இருப்பினும் ஒய்வு நேரத்தில் கால்பந்து விளையாடுவதை தனது சாய்ஸாக கொண்டிருந்த லூகாவுக்கு அப்போது வேறு எந்தவிதமான பொழுதுபோக்கும் இல்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் கால்பந்தும் காலுமாக திரிந்து வந்தார் லூகா.

லூகாவின் தேடல்களும், ஆசைகளும் கூட கால்பந்தை சார்ந்து தான் இருந்தன. குரோஷியாவின் போபனும், இத்தாலியின் ப்ரான்ஸிஸ்கொ டோட்டியும் தான் லூகாவின் மனதை கவர்ந்த கால்பந்தாட்ட வீரர்கள். இருவருமே கால்பந்தாட்ட களத்தில் சிறந்த நடுகள வீரர்களாக ஜொலித்தவர்கள். அவர்களை போலவே தானும் ஒரு நடுகள வீரனாக உருவெடுக்க வேண்டுமென்ற ஆசை லூகாவுக்கு வந்துள்ளது. 

அட்டாக்கிங், டிபேன்ஸ் என இரண்டையுமே கலந்து கட்டி ஆடும் திறமை ஒரு நடுகள வீரனுக்கு மட்டும் தான் இருக்கும் என்பதால் அந்த ஆசை வந்துள்ளது. 

அதனால் தனது  நகரத்தில் நடைபெறும் சிறுவர்களுக்கான கால்பந்து கிளப்புகளை தேடி திரிந்து NK ஜாடர் கால்பந்தாட்ட கிளப்பில் இணைந்துள்ளார். அங்கு தான் அவரது கால்பந்தாட்ட திறன்களை உரம் போட்டு வளர்க்க உதவிய பயிற்சியாளர் டெமிஸ்லோவை லூகா முதல்முறையாக சந்தித்தார். கிளப் போட்டிகளில் சிறப்பாக ஆடிய லூகாவுக்கு குரோஷிய நாட்டின் தலைசிறந்த கால்பந்தாட்ட கிளப் அணிகளில் ஒன்றான டைனோமோ அணியில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. அதில் தனது வாய்ப்பை லூகா நிரூபிக்க குரோஷிய நாட்டின் சர்வதேச அணியில் ஆடும் வாய்ப்பும் வந்தது. 

முதலில் குரோஷிய இளையோர் அணிக்காக ஆடிவந்த லூகாவுக்கு கடந்த 2006இல் தான் முதல்முறையாக சர்வதேச அணியில் ஆடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

நட்பு ரீதியாக குரோஷியாவும் அர்ஜென்டினாவும் மோதிய அந்த போட்டியில் நடுகள வீரனாக ஆடி அசத்திய லூகாவுக்கு யூரோ கோப்பை, உலகக் கோப்பை என மிகமுக்கிய சர்வதேச தொடர்களில் குரோஷியாவுக்காக ஆடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. லூகாவின் ஆட்டத்தை சைலண்டாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கிளப் அணிகளில் ஒன்றான ரியல் மேட்ரிட் அவரை ஏலத்தில் எடுக்க கடந்த 2012 துவங்கி இன்றுவரை அந்த அணிக்காக ஆடி வருகிறார். 

அதே வேகத்தோடு குரோஷிய அணியை கேப்டனாக வழிநடத்தி சென்ற லூகா கடந்த 2018இல் ரஷ்யாவில் நடந்து முடிந்த கால்பந்தாட்ட உலக கோப்பை தொடரில் தனது அணியை கோப்பைக்கு பக்கத்தில் அழைத்து சென்றார்.

உலகக்கோப்பை தொடரின் சிறந்த வீரருக்கான கோல்டன் பால் விருதை வென்று அசத்தினார் லூகா. ஒரு கேப்டனாக தனது நாட்டுக்கு உலக கோப்பையை வென்று கொடுக்க லூகா தவறி இருந்தாலும் ஒரு கால்பந்தாட்ட வீரனாக ரசிகர்களின் மனதை வென்றுள்ளது அவரது வாழ்நாள் சாதனையாகும். லூகாவின் உலக கோப்பை கனவை குரோஷிய அணியில் இடம்பெற்றுள்ள அவரது சிஷ்யப்பிள்ளைகள் அடுத்த சில ஆண்டுகளில் நிஜமாக்குவர் என நம்புவோம்.

2018 க்கான தலைசிறந்த கால்பந்தாட்ட வீரனுக்கான விருதையும் லூகா வென்றுள்ளார்.

ஹேப்பி பர்த் டே...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com