உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அடுத்த இரு போட்டிகளில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் விளையாட மாட்டார் என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை தொடரில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 140, விராட் கோலி 77, கே.எல்.ராகுல் 57 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து, 337 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் மட்டுமே எடுத்து, தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் காயமடைந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார், அடுத்த இரு போட்டிகளில் விளையாட மாட்டார் என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரை வீசும்போது, புவனேஸ்வர்குமார், வழுக்கி கீழே விழுந்தார். இதையடுத்து மைதானத்தைவி்ட்டு வெளியேறிய அவர் திரும்ப வரவில்லை.
இந்நிலையில், இந்தியா வெற்றி பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் விராட் கோலி, புவனேஸ்வர்குமாரின் காயம் குணமடைவதற்கு சில நாட்கள் ஆகும் என்றும், அவர் 2 அல்லது 3 போட்டிகளில் பங்கேற்க மாட்டார் எனவும் தெரிவித்தார். அவருக்குப் பதில், முகம்மது ஷமி அணியில் சேர்க்கப்படுவார் என்றும் கோலி கூறினார். இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவான் காயம் காரணமாக விளையாடாமல் உள்ள நிலையில், தற்போது புவனேஸ்வர் குமாரும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.