சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் ஆல் ரவுண்டர்களின் தரவரிசையில் இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார். மான்செஸ்டரில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் முடிவின் அடிப்படையில் ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது.
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே உயிர் பாதுகாப்பு சூழலுக்கு (Biosecurity bubble) நடுவே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணி வீரர்களும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாத வகையில் கடும் கட்டுப்பாடுகளுடன் விதிகளை பின்பற்றி ஆடி வருகின்றனர். முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இதன்பின் 2வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டு ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த போட்டியில், இங்கிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. இவ்விரு அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் வருகிற 24 ஆம் தேதி தொடங்குகிறது.
இதில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்டில் முதல் இன்னிங்சில் 176 ரன்களும், 2-வது இன்னிங்சில் அதிரடியாக 57 பந்தில் 78 ரன்களும் விளாசி மிரட்டிய பென் ஸ்டோக்ஸ் 101 புள்ளிகளை கூடுதலாக சேகரித்து மொத்தம் 827 புள்ளிகளுடன் பேட்ஸ்மேன் தரவரிதையில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஷேனுடன் 3-வது இடத்தை பகிர்ந்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் (911 புள்ளி) முதலிடத்திலும், இந்திய கேப்டன் விராட் கோலி 2-வது இடத்திலும் (886 புள்ளி) நீடிக்கிறார்கள். நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 5-வது இடமும், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 9-வது இடமும் கிடைத்துள்ளது.
ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் பென் ஸ்டோக்ஸ் முதல்முறையாக முதலிடத்தை பிடித்துள்ளார். மான்செஸ்டர் டெஸ்டில் சதம், அரைசதம், 3 முக்கியமான விக்கெட் என்று ஆல்-ரவுண்டராக ஜொலித்த ஸ்டோக்ஸ் அதன் மூலம் 66 புள்ளிகளை திரட்டி மொத்தம் 497 புள்ளிகளுடன் முதலிடத்தை எட்டியுள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் 2-வது இடத்துக்கு (459 புள்ளி) தள்ளப்பட்டார். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 3-வது இடத்தில் (397 புள்ளி) இருக்கிறார்.