ஐபிஎல் 2021 போட்டிகளை எங்கு நடத்துவது என்ற முடிவை பிசிசிஐ வீரர்கள் ஏலத்துக்கு பின்பு முடிவெடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
2021 ஐபிஎல் தொடருக்காக 8 அணிகளும் சேர்த்து மொத்தம் 57 வீரர்களை விடுவித்த நிலையில் ஐபிஎல் ஏலம் சென்னையில் பிப்ரவரி 18-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் சென்னையில் முதல் முறையாக அதற்கான ஏலம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று காரணமாக கடந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற்றது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத காரணத்தில் ஏப்ரல் - மே மாதத்தில் ஐபிஎல் போட்டிகளை எங்கு நடத்துவது என்று பிசிசிஐ ஆலோசித்து வருகிறது.
இது குறித்து "டைம்ஸ் ஆஃப் இந்தியா"வுக்கு பேட்டியளித்துள்ள பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் "ஐபிஎல் மினி ஏலம் பிப்ரவரி 18 இல் முடிவடைந்ததும் எந்த இடத்தில் போட்டிகளை நடத்தலாம் என்று ஆலோசிக்கப்படும். இந்தியாவில் போட்டிகளை நடத்துவதற்கு முன்பு பல்வேறு காரணிகளை ஆராய வேண்டியிருக்கிறது. இம்முறையும் அமீரகத்தை ஒரு ஆப்ஷனாக வைத்திருக்கிறது பிசிசிஐ. இது தொடர்பாக அமீரக கிரிக்கெட் சங்கத்துடன் கடந்த செப்டம்பரில் புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகி இருக்கிறது" என்றார்.
மேலும் பேசிய அவர் "இப்போதைக்கு ஐபில் அணிகளுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எல்லாம் திட்டமிட்டப்படி இந்தியாவிலேயே நடக்கும் என நம்புகிறோம். இது குறித்து ஐபிஎல் அணி நிர்வாகத்தினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்" என்றார்.