அடுத்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடத்த திட்டமிட்டுள்ளது பிசிசிஐ.
உலக அளவில் நடத்தப்படும் விளையாட்டு தொடர்களில் அதிக வருமானம் ஈட்டும் 'டாப்-5' விளையாட்டுகளில் ஒன்றாக உள்ளது ஐபிஎல் கிரிக்கெட். ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கான வரவேற்பு கூடிக்கொண்டே உள்ளது. இதனிடையே ஆண்களுக்கு நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போலவே, மகளிருக்கான ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ நீண்டகாலமாக ஆலோசித்து வந்தது. இந்நிலையில் அடுத்த ஆண்டிலிருந்து ஆண்களுக்கான ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்பு மகளிர் ஐபிஎல் போட்டியை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக மகளிர் ஐபிஎல் திட்டங்கள் பற்றி மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ அனுப்பியுள்ள கடிதத்தில், ''அடுத்த ஆண்டு (2023) மார்ச் மாதம் நடக்கும் மகளிர் ஐபிஎல் தொடரில் 5 அணிகள் பங்கேற்கும். அவை சென்னை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர், அகமதாபாத் என்ற நகரங்களுக்கு உரிய அணிகளாக இருக்கும். இன்னும் அட்டவணை தயாராகவில்லை. எனினும் ஆண்கள் ஐபிஎல் போட்டி தொடங்கும் முன்பு மகளிர் ஐபிஎல் போட்டி முடிவடைந்து விடும்.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் 2 முறை விளையாடுவார்கள். ஒவ்வொரு அணியிலும் 18 வீராங்கனைகள் இருப்பார்கள். 6 வெளிநாட்டு வீராங்கனைகளுக்கு அனுமதி வழங்கப்படும். ஆட்டத்தில் விளையாடும் 11 வீராங்கனைகளில் 5 வெளிநாட்டு வீராங்கனைகள் இடம்பெறலாம். போட்டி 2 இடங்களில் 20 ஆட்டங்கள் கொண்டதாக நடத்தப்படும். ஓர் இடத்தில் முதல் 10 ஆட்டங்களும் மற்றொரு இடத்தில் அடுத்த 10 ஆட்டங்களும் நடைபெறலாம்'' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே: உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள்.. டாப் 5ல் 4 இந்திய வீரர்கள்.. முதலிடம் யார் தெரியுமா?