இந்தாண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற இருப்பதாகவும், ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் போட்டி நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
2021 ஐபிஎல் தொடருக்காக 8 அணிகளும் சேர்த்து மொத்தம் 57 வீரர்களை விடுவித்த நிலையில் ஐபிஎல் ஏலம் சென்னையில் பிப்ரவரி 18-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் சென்னையில் முதல் முறையாக அதற்கான ஏலம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று காரணமாக கடந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற்றது.
ஆனால் இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற இருப்பதாக தெரியவந்துள்ளது. 'இன்சைட் ஸ்போர்ட்' ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர் "இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர்கள் மார்ச் மாதம் நிறைவடையும். பின்பு வீரர்கள் அனைவருக்கும் போதிய ஓய்வு அளிக்கப்படும். இதனையடுத்து ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்பட்டு ஜூன் 5 அல்லது 6 தேதியில் நிறைவடையும்" என்றார்.
இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேசிய அருண் சிங் துமால் "ஐபிஎல் தொடரை இந்தியாவிலேயே நடத்துவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நிச்சயம் இந்தியாவிலேயே போட்டி நடைபெறும் என நம்புகிறேன். இப்போதைய சூழலில் அமீரகத்தில் போட்டியை நடத்துவதை விட இந்தியாவிலே நடத்துவதே பாதுகாப்பானது" என்றார்.