இந்திய கிரிக்கெட் அணியின் தேசிய தேர்வுக்குழு கூண்டோடு நீக்கம்-பிசிசிஐ அதிரடி

இந்திய கிரிக்கெட் அணியின் தேசிய தேர்வுக்குழு கூண்டோடு நீக்கம்-பிசிசிஐ அதிரடி
இந்திய கிரிக்கெட் அணியின் தேசிய தேர்வுக்குழு கூண்டோடு நீக்கம்-பிசிசிஐ அதிரடி
Published on

டி20 உலகக் கோப்பை தோல்வியை அடுத்து இந்திய அணியின் தேசிய தேர்வுக்வுக் குழுவை அடியோடு பிசிசிஐ நீக்கியுள்ளது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் அதிரடியாக ஆடி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்த நிலையில், நாக் அவுட் எனப்படும் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் துவக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கே.எல் ராகுல் வலுவான துவக்கத்தை அளிக்காததும், முகமது ஷமி, ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஷ்வர்குமார் போன்ற சீனியர் பவுலர்கள் இருந்தும் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாதது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. மேலும் தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் சோதனை முயற்சி மேற்கொள்வதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இதையடுத்து இந்திய வீரர்கள் நாடு திரும்பியதும், பிசிசிஐ ஆலோசனை கூட்டம் திட்டமிட்டது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் ஆகியோரின் கருத்தை கேட்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், வீரர்களை தேர்வு செய்வதில் குளறுபடி நிலவுதாக புகார் எழுந்தநிலையில், சேத்தன் சர்மா தலைமையிலான தேசிய தேர்வுக் குழுவை கூண்டோடு நீக்க பிசிசிஐ ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் பரவின.

தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு பதிலாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) புதிய தலைவராக முன்னாள் ஆல்ரவுண்டர் ரோஜர் பின்னி பொறுப்பேற்றுள்ள நிலையில், தேர்வுக்குழுவை முழுமையாக மாற்றியமைக்க புதிய பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி முடிவெடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது சீனியர் வீரர்கள் தேசிய தேர்வுக்குழுவின் தலைவரும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான சேத்தன் சர்மா, உறுப்பினர்களான சுனில் ஜோஷி, ஹர்விந்தர் சிங் மற்றும் தேபாஷிஷ் மொஹந்தி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் பிசிசிஐ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், புதிய தேசிய தேர்வுக்குழுவை தேர்ந்தெடுக்கும் வகையில் விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் 28-ம் 6 மணிக்குள் இந்தப் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com