இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது பிசிசிஐ.
இந்திய கிரிக்கெட் அணியில், ஒவ்வொரு தொடருக்கும் முன்பாக ‘யோ யோ’ என்னும் உடற்தகுதித் தேர்வு வீரர்களுக்கு மேற்கொள்ளப்படுகிறது. இதில் தேர்வு பெற்றால் மட்டும்தான் வீரர்கள் விளையாட முடியும். ‘யோ -யோ’வில் இந்திய வீரர்கள் தேர்வாக, 16.1 என குறைந்த பட்ச மதிப் பெண் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்த இந்த முறையை இந்தியாவுக்குக் கொண்டு வந்தவர், அனில் கும்ப்ளே. அவர் பயிற்சியாளராக இருந்தபோது இந்த முறையை இறக்குமதி செய்தார். இந்நிலையில், ‘யோ -யோ’ குறித்த முக்கிய முடிவுகளை பிசிசிஐ எடுத்துள்ளது.
மும்பையில் ஆலோசனை கூட்டம்;
மும்பையில் இன்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, கேப்டன் ரோகித் சர்மா, தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் விவிஎஸ் லட்சுமண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் 4 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்திய அணியில் இளம் வீரர்கள் இடம் பெற வேண்டுமானல் ரஞ்சி, சயீத் முஸ்தாக் அலி, துலிப் கோப்பை போட்டிகளில் அதிகம் விளையாடியிருக்க வேண்டும்; யோ-யோ உள்ளிட்ட பயிற்சி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் போன்ற புதிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
யோ-யோ டெஸ்ட் என்றால் என்ன?
உடல்தகுதியுடன் இருப்பதை உறுதி செய்வதற்கான சோதனைதான் யோ-யோ டெஸ்ட். இது பல்வேறு கட்டங்களை உள்ளடக்கியது. 20 மீட்டர் நீளமுள்ள இடத்தைத் தேர்வுசெய்து, 20 மீட்டரின் தொடக்கத்தை ஆரம்ப புள்ளியாகவும், அதன் இறுதியை முடிவு புள்ளியாகவும் குறித்துக் கொள்வார்கள். யோ-யோ டெஸ்ட்டில் பங்குபெறும் வீரர் இந்த 20 மீட்டரின் ஆரம்ப மற்றும் முடிவு புள்ளிகளை ஓடிச்சென்று மாறி, மாறி தொட்டு வர வேண்டும். 40 விநாடிகளில் எத்தனை முறை அந்த இரண்டு புள்ளிகளையும் தொட்டு வர முடிகிறது என்பதைப் பொறுத்து அதில் கலந்துகொண்ட வீரருக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும்.
சேவாக் ஒருமுறை சொன்னது!
யோ யோ சோதனை அறிமுகமானது முதல் இந்திய கிரிக்கெட் அணியில் சீனியர் வீரர்கள் பலரும் அதிருப்தியை தெரிவித்து இருக்கிறார்கள். ஏனெனில், அம்பத்தி ராயுடு, சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் இது அறிமுக தருணத்தில் சோதனையில் தோல்வி அடைந்திருந்தனர். அதனால், இளம் வீரர்கள் கூட சில நேரங்களில் சோதனையை தாண்ட முடியாமல் தவித்து இருக்கிறார்கள். தோனிக்கும் சீனியர் வீரர்கள் சிலருக்கு பிட்னஸ் விஷயத்தில்தான் சிக்கல் உருவானது அனைவரும் அறிந்ததே.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் சேவாக் முன்பு ஒருமுறை “நாங்கள் ஆக்டிவாக கிரிக்கெட் விளையாடிய போது யோ-யோ டெஸ்ட் இருந்திருந்தால் கங்குலி, சச்சின், லக்ஷமண் மாதிரியான வீரர்கள் அணியில் விளையாட தேர்வாகி இருக்க மாட்டார்கள்” என சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தவற விடாதீர்: '2022 டி20 உலக கோப்பையில் அஸ்வினுக்கு பதில் இவரை சேர்த்திருக்கலாம்' - தினேஷ் கார்த்திக்