இந்தியாவில் நடப்பாண்டில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிக்காக சென்னை உள்பட 9 இடங்களை ஐசிசிக்கு பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது.
ஐசிசிக்கு அளித்துள்ள பட்டியலில் சென்னை, அகமதாபாத், பெங்களூர், டெல்லி, தர்மசாலா, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை ஆகிய 9 இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தியாவிலும், சம்பந்தப்பட்ட இடங்களிலும் இருக்கும் கொரோனா சூழலின் அடிப்படையில், போட்டி நடத்தப்படும் இடங்களை ஐசிசி இறுதி செய்யும்.
இப்போதைய நிலையில், அக்டோபார் முதல் நவம்பர் வரை நடைபெறும் உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தை நவம்பர் 13 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. போட்டிக்காக பரிசீலிக்கப்படும் இடங்களில் சிலவற்றை ஐசிசி ஏற்கெனவே ஆய்வு செய்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா 2-ஆவது அலை தீவிரமாகியுள்ளதால் ஐசிசி தனது நிபுணர் குழுக்களை இந்தியாவுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் வரும் 26-ஆம் தேதி ஐசிசி குழு ஒன்று இந்தியா வருவதாகத் தெரிகிறது.
உலகக் கோப்பை போட்டி திட்டமிட்டபடி இந்தியாவில் நடைபெறும் என்று ஐசிசி ஏற்கெனவே தெரிவித்தபோதிலும், எதிர்பாராத சூழ்நிலையால் போட்டியை இடமாற்றம் செய்ய வேண்டி வந்தால் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மாற்று இடங்களாக பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிகிறது.