இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூலை மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு மேற்கிந்திய தீவுகளுடன் 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இதனிடையே, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான வீரர்கள் பட்டியலை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது.
இந்நிலையில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தேர்வு கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ருதுராஜ் கெய்குவாட், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில் ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட சர்ஃபராஸ் கானுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுகுறித்து பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
அந்தவகையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சர்பராஸ் கானை அணியில் சேர்க்காதற்கு அதிருப்தி தெரிவித்திருக்கும் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், “ரஞ்சி கோப்பை தொடரில் கடந்த 3 சீசன்களாக சர்பராஸ் கான் 100 ரன்களை கடந்து சராசரி வைத்துள்ளார். இந்திய அணியில் தேர்வாவதற்கு சர்பராஸ் கான் இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும். அவர் விளையாடும் 11 வீரர்களில் இருக்க வேண்டாம், ஆனால் அவரை அணியிலாவது எடுத்திருக்க வேண்டும். அவரது திறமைக்கு வாய்ப்பு வழங்கப்படும் என பிசிசிஐ அவரிடம் கூற வேண்டும் அல்லது ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடுவதை சர்பராஸ் கான் நிறுத்த வேண்டும்” என்று காட்டமாகக் கூறினார்.
25 வயதான சர்ஃபராஸ் கான் கடந்த மூன்று ரஞ்சி சீசன்களில் 37 ஆட்டங்களில் 2,566 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 79.65 ஆகும். உள்ளூர் கிரிக்கெட் அடிப்படையில் ஜாம்பவான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் சர்ஃபராஸ் உள்ளார். அவரது ஆன்-பீல்டு திறனை பற்றி அறிந்திருந்தும் தேர்வாளர்கள் அவரை புறக்கணித்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் சர்ஃபராஸ் கானை இந்திய அணியில் சேர்க்காதது குறித்து PTI செய்தி நிறுவனத்திடம் பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர், “சர்ஃபராஸ் கான் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாததற்கு அவரது கிரிக்கெட் திறன் காரணம் கிடையாது. களத்திலும், களத்திற்கு வெளியேவும் அவரது செயல்பாடுகள் முறையாக இல்லை. போட்டியின் போது ஆக்ரோஷமாக அவர் கொண்டாடும் விதத்தை நாங்கள் கவனித்து வருகிறோம். சற்று கட்டுப்பாட்டுடன் நடந்துக்கொள்வதே அவருக்கு நன்மை கொடுக்கும். அவரது உடல் வலிமையும் சர்வதேச தரத்தில் இல்லை. அவர் சற்று எடை குறைக்க வேண்டும். அடுத்தடுத்த சீசன்களில் 900-க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்த ஒருவரை, அணியில் எடுக்க தெரியாத அளவிற்கு நாங்கள் முட்டாள் அல்ல” என்றார்.