இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கரும், வி.வி.எஸ்.லஷ்மணும் ஆதாயம் தரும் இரு பதவிகளை வகிப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததது. இதனையடுத்து இருவரும் பிசிசிஐ மத்தியஸ்தரும், நெறிமுறைகள் அலுவலருமான டி.கே.ஜெயின் முன் மே 13 ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
டெண்டுல்கர், விவிஎஸ்.லஷ்மண், செளரவ் கங்குலி உள்ளிட்ட மூவரும் பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக உள்ளனர். மேலும் மும்பை அணியின் ஆலோசகராக சச்சின், ஹைதராபாத் அணியின் ஆலோசகராக லஷ்மணும் உள்ளனர். இருவரும் ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிப்பதாக மத்தியப்பிரதேச கிரிக்கெட் சங்க உறுப்பினர் சஞ்சீவ் குப்தா புகார் செய்தார். அதன்படி இருவரும் விளக்கம் தரும்படி பிசிசிஐ மத்தியஸ்தரும், நெறிமுறைகள் அலுவலருமான டிகே.ஜெயின் நோட்டீஸ் அனுப்பினார்.
இதற்கு ஏற்கெனவே சச்சின் டெண்டுல்கரும் பதில் அனுப்பினார் அதில் "என் மீதான புகார்களை முழுமையாக மறுக்கிறேன். இதில் எந்த முகாந்திரமும் இல்லை. மும்பை அணி நிர்வாகத்திடம் இருந்து எந்தவித ஊதியமோ, வேறு பலனோ பெறவில்லை. எந்த பொறுப்பிலும் இல்லை. அணித் தேர்விலோ அல்லது, முடிவெடுப்பதிலோ எந்த பங்கும் வகிக்கவில்லை.
மும்பை அணியில் சேர்ந்த பின்னரே, 2015-இல் பிசிசிஐ ஆலோசனைக் குழுவில் சேர்க்கப்பட்டேன். மும்பை அணியின் விளம்பர தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளேன். அணியை வழிகாட்டுவதே எனது பணியாகும். சஞ்சீவ் குப்தா புகார் கேலிக்குரியது.
மும்பை அணியில் தலைமை பயிற்சியாளர், இயக்குநர் (ஆட்டங்கள்) போன்றவர்களும் உள்ளனர். மத்தியஸ்தர் மேலும் விசாரிக்க வேண்டும் என்றால் சட்டத்தின்படி செயல்பட உள்ளேன் என விளக்கத்தில் சச்சின் கூறியுள்ளார்.
ஆனால் இது குறித்து லஷ்மண் எந்த பதிலும் அனுப்பவில்லை. எனினினும் இருவரிடமும் நேரில் விசாரணை நடத்த பிசிசிஐ முடிவு செய்து சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், சச்சின் அளித்த விளக்கங்கள் சரியானவையா என்று அறிய மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தினரையும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.