சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை, இந்திய அணி முழுமையாக இழந்த நிலையில், இந்திய அணி மீது தொடர்ந்து விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. இந்த தோல்வி காரணமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதிலும் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் மீது ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் உள்ளிட்டோர் இணைந்து கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோரிடன் 6 மணி நேரமாக பல்வேறு விஷயங்களை விவாதித்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதில் கவுதம் கம்பீர் வீடியோ கால் மூலம் இணைந்திருந்தார். இந்தக் கூட்டத்தின்போது, அடுத்த டெஸ்ட் கேப்டன், கம்பீரின் பயிற்சி முறைகள், நிர்வாகிகளிடம் காணப்படும் கருத்து வேறுபாடு, ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான ஆலோசனைகள், அடுத்த பிசிசிஐ செயலாளர் யார் என்பது குறித்து உள்ளிட்ட பல விஷயங்கள் பேசப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே இந்தக் கூட்டம் 6 மணி நேரம் நீட்டித்துள்ளது. அதிலும், கம்பீரின் பயிற்சி பற்றி அதிகமாக விமர்சிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்தக் கூட்டத்தில் பயிற்சியாளர் கவுதம் கம்பீரை, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கேள்விகளால் துளைத்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஆலோசனைக் கூட்டத்தில், கடைசி டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டதை பிசிசிஐ நிர்வாகிகள் ரசிக்கவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து கேள்விகள் எழுந்தபோது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டதாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இந்திய டெஸ்ட் அணி தற்போது தோல்விப் பாதையில் சென்று கொண்டிருக்கும் நிலையில், அடுத்த கேப்டனை கம்பீர் எப்படி தயார் செய்யப் போகிறார்? யாரை கேப்டனாக தேர்வு செய்ய உள்ளார்? என பிசிசிஐ சார்பில் கேள்வி முன்வைக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து, கவுதம் கம்பீரின் பயிற்சி அணுகுமுறை குறித்தும் ஆராயப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது அவரது முன்னோடியான ராகுல் டிராவிட்டுடன் கணிசமாக வேறுபடுவதாக கூறப்படுகிறது.
கம்பீரின் ஆக்ரோஷமான பாணி ஆரம்பத்தில் வரவேற்கப்பட்டாலும், குழு நிர்வாகத்தின் அனைத்து உறுப்பினர்களும் அவரது முறைகளுடன் ஒத்துப்போவதில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கம்பீர் அதற்கு என்ன பதில் கூறினார் என்பது பற்றி தகவல் வெளியாகவில்லை. இறுதியில், ரோஹித், அகர்கர் மற்றும் கம்பீர் ஆகியோர் அணியின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய சரியான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிசிசிஐ வலியுறுத்தியதுடன் ஆய்வுக் கூட்டம் முடிந்தது.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ரோஹித் சர்மா தனிப்பட்ட காரணங்களுக்காக விலக உள்ளதால் அந்த போட்டியில் பும்ரா கேப்டனாக செயல்படுவார் என கூறப்படுகிறது. எனவே, ரோஹித் சர்மாவுக்கு பின் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருப்பாரா என்ற கேள்வி உள்ளது. ஏனெனில், ரோஹித் சர்மாவுக்கு தற்போது 37 வயதாகும் நிலையில் அவர் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருடன் ஓய்வு பெற அதிக வாய்ப்பு உள்ளது. ஒருவேளை, அவர் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறாவிட்டால், 2026 முதல் இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனைத் தேர்வு செய்யும்பட்சத்தில் பிசிசிஐ இருப்பதாகத் தெரிகிறது. இதன் காரணமாகவே கம்பீருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: IND Vs SA | ஒரே போட்டி.. ருத்ரதாண்டவம் ஆடிய சஞ்சு சாம்சன்.. பல சாதனைகள் முறியடிப்பு!