இந்திய அணியில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பே 5வது டெஸ்ட்டை ரத்துசெய்யும் சூழ்நிலைக்கு தள்ளியதாக பிசிசிஐ விளக்கம் கொடுத்திருக்கிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 10 முதல் 14ஆம் தேதிவரை இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராபோர்ட் மைதானத்தில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (BCCI) இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியமும் (ECB) இணைந்து மான்செஸ்டரில் நடைபெறவிருந்த 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யும் முடிவை எடுத்திருப்பதாக பிசிசிஐயின் செயலாளர் ஜெய் ஷா அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
டெஸ்ட் போட்டியை நடத்த இங்கிலாந்து வாரியத்திடம் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் பிசிசிஐ தெரிவித்திருக்கிறது. மேலும் பிசிசிஐ மற்றும் இசிபியும் இணைந்து ரத்து செய்யப்பட்ட போட்டியை மீண்டும் நடத்த முன்வந்துள்ளதாகவும், ஆனால் எப்போது என முடிவெடுக்கவில்லை என்றும் தெரிவித்திருக்கிறது. வீரர்களின் பாதுகாப்பை பிசிசிஐ எப்போதும் கருத்தில்கொள்வதாகவும், அதில் ஒருபோதும் சமரசம் செய்யமாட்டோம் எனவும் தெரிவித்திருக்கிறது. மேலும் தங்கள் சூழ்நிலையை புரிந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்கிய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு தனது நன்றிகளையும், ரசிகர்களுக்கு ஏமாற்றத்திற்கு வருத்தங்களையும் பிசிசிஐ தெரிவித்திருக்கிறது.