விராட் கோலிக்காக விதிமுறைகளை மாற்றியது பிசிசிஐ - டயானா எடுல்ஜி

விராட் கோலிக்காக விதிமுறைகளை மாற்றியது பிசிசிஐ - டயானா எடுல்ஜி
விராட் கோலிக்காக விதிமுறைகளை மாற்றியது பிசிசிஐ - டயானா எடுல்ஜி
Published on

விராட் கோலிக்காக பிசிசிஐ தன்னுடைய விதிமுறைகளை மாற்றியதாக நிர்வாகக் குழு உறுப்பினர் டயானா எடுல்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியின் முக்கியமான அரையிறுதிப் போட்டியில் மிதாலி ராஜ் சேர்க்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. முதல் இரண்டு போட்டியில் அரைசதம் அடித்திருந்த அவரை, முக்கியமான அரையிறுதி போட்டியில் அணியில் சேர்க்காமல் உட்கார வைத்தனர். அந்தப் போட்டியில் இந்திய அணி தோற்று, தொடரில் இருந்து வெளியேறியது. இதனையடுத்து, பெண்கள் அணிக்கான பயிற்சியாளர் ரமேஷ் பவார் மீது மிதாலி ராஜ் கடுமையாக குற்றச்சாட்டினார். பவாரும், மிதாலி மீது விமர்சனங்களை முன் வைத்தார்.

இதனையடுத்து, பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த ரமேஷ் பவாரின் பதவிக்காலம் நவம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து இவரின் பதவிக்காலத்தை நீட்டிக்காமல் புது பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் பிசிசிஐ தெரிவித்திருந்தது. சர்ச்சையை அடுத்து ரமேஷ் பவார் திரும்பவும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க மாட்டார் என்று கூறப்பட்டது. 

ஆனால், இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, பவார் பயிற்சியாளராக தொடர வேண்டும் என்று ஹர்மான்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா ஆகியோர் பிசிசிஐ-யிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதுதொடர்பாக பிசிசிஐக்கு அவர்கள் கடிதம் எழுதியதை அடுத்து, பயிற்சியாளர் பொறுப்புக்கு மீண்டும் ரமேஷ் பவார் விண்ணப்பித்தார். அதேபோல், டாம் மூடி, டேவ் வாட்மோர், வெங்கடேஷ் பிரசாத் ஆகியோர் இந்தப் பதவிக்கு ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. 

ரமேஷ் பவார் மற்றும் மிதாலி ராஜ் இடையிலான பனிப்போர் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், யாரை பயிற்சியாளராக நியமிப்பது என்பது தொடர்பாக நிர்வாகக் குழு உறுப்பினர்களான டயானா எடுல்ஜி மற்றும் வினோத் ராய் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே, பிசிசிஐ மீது டயானா எடுல்ஜி குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளார். கேப்டன் விராட் கோலிக்காக அனில் கும்ளேவுக்கு பதிலாக ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். 

முன்னதாக, மித்தாலி ராஜ் தொடர்பாக சர்ச்சையில், “மிதாலி இடம் பெறாதது அவ்வளவு முக்கியமான விஷயம் அல்ல. இந்திய அணி வெற்றி பெற்றிருந்தால் யாரும் கேள்வி எழுப்பி இருக்கமாட்டார்கள்” என்று எடுல்ஜி கூறியிருந்தார். இதனையடுத்து, எடுல்ஜி தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார் என்று மிதாலி குற்றம்சாட்டினார். அதோடு, விராட் கோலி விவகாரத்தில் எப்படி அவரது கருத்தினை கேட்கப்பட்டதோ, அதேபோல், பவாரை திரும்பவும் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என ஹர்மன்ப்ரீடின் கருத்துக்கும் நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராய் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று எடுல்ஜி வலியுறுத்தினார். 

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியில் இந்தியா தோல்வி அடைந்ததை தொடர்ந்து தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அனில் கும்ளே வெளியேறினார். அப்போது, கும்ளேவுக்கும் விராட் கோலிக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது. கும்ளே பயிற்சியாளராக தொடர விராட் கோலி விரும்பவில்லை என்றே அப்போது பேசப்பட்டது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com