விக்கெட் கீப்பர் சாஹாவை பத்திரிக்கையாளர் மிரட்டிய விவகாரம் - பிசிசிஐ அதிரடி நடவடிக்கை

விக்கெட் கீப்பர் சாஹாவை பத்திரிக்கையாளர் மிரட்டிய விவகாரம் - பிசிசிஐ அதிரடி நடவடிக்கை
விக்கெட் கீப்பர் சாஹாவை பத்திரிக்கையாளர் மிரட்டிய விவகாரம் - பிசிசிஐ அதிரடி நடவடிக்கை
Published on

இந்திய அணி வீரரான விருத்திமான் சாஹாவை மிரட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்ட பத்திரிகையாளர் போரியா மஜும்தாருக்கு (Boria Majumdar), இரண்டு ஆண்டுகள் பிசிசிஐ தடை விதித்துள்ளது.

அண்மையில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை அணி, 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடியது. இந்த டெஸ்ட் போட்டிகளில், மூத்த வீரர்களான ரஹானே, புஜாரா, இஷாந்த் சர்மா, விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா உள்ளிட்டவர்களுக்கு அணியில் இடம் அளிக்காதது சர்ச்சையை கிளப்பியது.

இதனால் அதிருப்தி அடைந்த 37 வயதான விருத்திமான் சாஹா, பயிற்சியாளர் டிராவிட், பிசிசிஐ தலைவர் கங்குலி ஆகியோர் இனி வரும் அனைத்து தொடர்களிலும் இளம் வீரர்களுக்கே வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறியதாகவும், தன்னை ரஞ்சி தொடரில் விளையாடுமாறு இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் பெரிதாகப் பேசப்பட்டநிலையில், இதுதொடர்பாக பத்திரிகையாளர் ஒருவர் பேட்டி தரச் சொல்லி தன்னை வற்புறுத்தியதாக விருத்திமான் சாஹா குற்றஞ்சாட்டியிருந்தார். அத்துடன், ‘இந்திய கிரிக்கெட்டிற்கு இத்தனை வருடங்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய என்னைப் போன்ற ஒரு வீரர், ஒரு மதிப்புமிக்க பத்திரிகையாளரிடமிருந்து எதிர்கொள்வது இதுதான். பத்திரிக்கை தர்மம் எங்கே போனது’ என்று தன் ஆதங்கத்தை ட்விட் மூலமாக வெளிப்படுத்தி பரபரப்பை கிளப்பினார்.

அந்தப் பத்திரிகையாளர் அனுப்பிய வாட்ஸ் அப் செய்திகளையும் தன் ட்வீட்டில் விருத்திமான் சாஹா இணைத்திருந்தார். இதையடுத்து அந்த பத்திரிக்கையாளரின் பெயரை வெளியிட வேண்டும் என்று சாஹாவை, இந்திய முன்னாள் கிரிக்கெட் விரர்கள் பலரும் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து பிசிசிஐ பொருளாளர் அருண் துமால், ‘புகார் குறித்தஉண்மைத்தன்மை குறித்தும், சாஹா மிரட்டப்பட்டரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும்’ என்று கூறியிருந்தார்.

அதன்பின்னர், அந்தப் பத்திரிக்கையாளர் போரியா மஜும்தார் என தெரியவந்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக 3 பேர் கொண்ட குழுவை அமைத்த பிசிசிஐ, விசாரணையை தொடங்கியது. இந்தக் குழுவில், பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, பொருளாளர் அருண் துமால், கவுன்சிலர் பிரப்தேஜ் சிங் ஆகியோர் இருந்தனர். விருத்திமான் சாஹா மற்றும் போரியா மஜும்தார் இருவரிடம் இந்தக் குழு விசாரணை நடத்தியது.

இதற்கிடையில், தான் வாட்அப் செய்திகளை இடம் மாற்றி விருத்திமான் சாஹா வெளியிட்டதாக பத்திரிக்கையாளர் போரியா மஜும்தார் புகார் தெரிவித்தார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய மூன்று பேர் கொண்ட பிசிசிஐ விசாரணை கமிட்டி, பத்திரிக்கையாளர் போரியா மஜும்தார் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, அவருக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த 2 ஆண்டுகள் தடை குறித்து வெளியான கடிதத்தில்,

1. இந்தியாவில் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் (உள்நாட்டு மற்றும் சர்வதேச) பத்திரிகையாளராக செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

2. இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட எந்த கிரிக்கெட் வீரர்களிடம் பேட்டி மற்றும் நேர்காணல் எடுக்க முடியாது.

3. பிசிசிஐ மற்றும் அதனுடன் இணைந்துள்ள கிரிக்கெட் சங்கங்களின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள கிரிக்கெட் பகுதிகளில் அனுமதி மறுக்கப்படுவதுடன், அதுதொடர்பான வசதிகள் எதையும் போரியா மஜும்தாரால் பெற முடியாது.

பத்திரிக்கையாளர் போரியா மஜும்தாருக்கு விதிக்கப்பட்ட தடை குறித்த கடிதத்தை, மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு, பிசிசிஐ-யின் இடைக்கால தலைமை செயல் அதிகாரி ஹேமங் அமீன் அனுப்பியுள்ளார். விருத்திமான் சாஹா, நடப்பாண்டு 15-வது சீசன் ஐபிஎல் போட்டியில், அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com