ஜனவரி முதல் மார்ச் வரை இந்திய கிரிக்கெட் அணி 'செம பிஸி' - அறிவிப்பை வெளியிட்ட பிசிசிஐ
அடுத்தாண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை இலங்கை, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. இதற்கான அட்டவணையை பிசிசிஐ இப்போது வெளியிட்டுள்ளது.
இதில் முதலில் இலங்கை அணி 3 டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுடன் மோதுகிறது. இதில் முதல் ஜனவரி 3 முதல் ஜனவரி 7 ஆம் தேதி வரை மும்பை, புனே, ராஜ்கோட்டில் டி20 போட்டிகள் நடைபெறுகிறது. இதனையடுத்து ஜனவரி 10 முதல் ஜனவரி 15 ஆம் தேதி வரை குவாஹாத்தி, கொல்கத்தா மற்றும் திருவனந்தபுரத்தில் ஒருநாள் போட்டிகள் நடைபெறுகிறது.
பின்பு நியூசிலாந்து அணியும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணியுடன் 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது. ஜனவரி 18 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 24 ஆம் தேதி வரை ஹைதராபாத், ராய்பூர், ராஞ்சியில் ஒருநாள் போட்டிகள் நடைபெறுகிறது. மேலும், ஜனவரி 27 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 1 ஆம் தேதி வரை ராஞ்சி, லக்னோ மற்றும் அகமதாபாதில் டி20 போட்டிகள் நடைபெறுகிறது.
பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியா வரவிருக்கிறது. இதில் மொத்தம் 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் முதல் டெஸ்ட் பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை நாக்பூரில் நடைபெறுகிறது. 2 ஆவது டெஸ்ட் பிப்ரவரி 17 முதல் 21 வரை டெல்லியில் நடைபெறுகிறது.
3ஆவது டெஸ்ட் மார்ச் 1 முதல் 5 வரை தரம்சாலாவில் நடைபெறுகிறது. இந்தத் தொடரின் கடைசிப் போட்டி மார்ச் 9 முதல் 13 ஆம் தேதி வரை அகமதாபாதில் நடைபெறுகிறது. மேலும் மார்ச் 17 முதல் 22 ஆம் தேதி வரை மும்பை, விசாகப்பட்டினம் மற்றும் சென்னையில் ஒருநாள் போட்டிகளும் நடைபெறுகிறது.