அபார கேட்ச் பிடித்து நிசாங்காவை வெளியேற்றிய பசில்! ஆனால் இறுதியில் வில்லனாக வந்த சமீரா!

அபார கேட்ச் பிடித்து நிசாங்காவை வெளியேற்றிய பசில்! ஆனால் இறுதியில் வில்லனாக வந்த சமீரா!
அபார கேட்ச் பிடித்து நிசாங்காவை வெளியேற்றிய பசில்! ஆனால் இறுதியில் வில்லனாக வந்த சமீரா!
Published on

16 அணிகள் பங்கேற்கும் 8வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 16 அணிகளில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி உள்ளன. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக முதல் சுற்று ஆட்டங்களில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் முதல் சுற்று ஆட்டத்தில் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் விளையாடின. டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி இலங்கைக்கு எதிராக முதலில் பந்துவீச முடிவு செய்தது. இலங்கையின் ஓப்பனர்களாக களமிறங்கிய பதும் நிசங்கா மற்றூம் குஷால் மெண்டீஸ் ஆகிய இருவரும் நிதானமாகவும் பொறுப்பாகவும் விளையாடி அணிக்கு வலுவான துவக்கம் அமைத்து கொடுத்தனர்.

நிசங்கா அதிரடியாக விளையாடத் துவங்க, மெண்டீஸ் பொறுமையாக விளையாடியதால் 5வது ஓவரிலேயே 40 ரன்களை ஜம்மென்று கடந்தது இலங்கை. அர்யன் லக்ரா பந்துவீச்சில் எல்பிடபுள்யூ ஆகி மெண்டீஸ் நடையைக் கட்ட, நிசங்காவுக்கு துணை நிற்கும் பொறுப்பை தனஞ்செயா டி செல்வா ஏற்றார். அவரும் பொறுப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை விறுவிறுவென உயர்த்திக் கொண்டிருக்க, அப்சல் கான் மற்றும் ரிஸ்வான் ஆகிய இருவரால் அசத்தல் ரன் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார் தனஞ்செயா.

இதையடுத்து களமிறங்கிய இலங்கை பேட்டர்களுக்கு வில்லனாக வந்தார் தமிழக வீரர் கார்த்திக் மெய்யப்பன். பனுகா ராஜபக்சே, அசலன்கா, ஷனாகா ஆகிய மூவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார் கார்த்திக். இதன் மூலம் இந்த டி20 உலகக் கோப்பையின் முதல் ஹாட்-டிரிக்கை வீழ்த்தி சாதனை படைத்தார் கார்த்திக்.

இதையடுத்து களம் கண்ட வனிந்து ஹசரங்கா, கருணாரத்னே ஆகியோரை அப்சல் கான், சஹூர் கான் ஆகியோர் பெவிலியனுக்கும் வழியனுப்பி வைத்தனர். அரைசதம் கடந்து அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த ஓப்பனர் நிசங்காவும் சஹூர் கான் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். சஹூர் வீசிய பந்தை எல்லைக்கோடு நோக்கி நிசாங்கா விளாசியபோதிலும், பசில் முகமது அபாரமாக தாவிப் பிடித்து அவரது அவுட் ஆவதை உறுதி செய்தார், இதன் விளைவாக 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்களை குவித்தது. இதனிடையே, பசில் கேட்ச் ஆனது தென்னாப்ரிக்க வீரர் ஜாண்டி ரோஸ் பிடிக்கும் கேட்ச் போல இருந்ததாக பலரும் பாராட்டி வருகின்றனர். 

இதையடுத்து 153 ரன்களை குவித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஐக்கிய அரபு அமீரக அணி விளையாடியது. அந்த அணிக்கு துவக்கத்திலேயே ஒரு பேரதிர்ச்சியை நிகழ்த்திக் காட்டினார் இலங்கை பவுலர் சமீரா. துவக்கத்தில் களமிறங்கிய மூன்று பேட்டர்களை சமீரா பெவிலியனுக்கு வழியனுப்பி வைத்ததால், 17.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 73 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 79 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது அமீரக அணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com