வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் வென்று தொடரை முழுமையாகக் கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்குகிறது.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சட்டோகிராமில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- வங்கதேசம் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா இந்த போட்டியில் விளையாடமாட்டார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், கே.எல்.ராகுல் கேப்டனாக நீடிக்கிறார். இந்த நிலையில், 2வது போட்டியிலும் வென்று தொடரை முழுமையாகக் கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்குகிறது. அதே சமயம், ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியும் இந்த போட்டியில் வென்று தொடரை 'டிரா' செய்ய போராடக்கூடும்.
இந்திய அணியில் எந்தவித மாற்றங்களும் இருக்க வாய்ப்பில்லை. முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் கலக்கினர். பந்து வீச்சில் குல்தீப் யாதவ் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 8 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். இதனால் இன்றைய ஆட்டத்திலும் இந்திய அணியின் கையே ஓங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.