உலகக் கோப்பை போட்டியில் தோனியின் ஸ்டம்பிங்கிலிருந்து தப்பித்த தருணம் குறித்து வங்கதேச கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் ஷபீர் ரஹ்மான் தன் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
சமீபகாலமாக தோனியுடனான அனுபவங்கள் குறித்து கிரிக்கெட் வீரர்கள் பலரும் பேசி வருகின்றனர். கிரிக்கெட் வீரர்கள் வேறு எதையாவது பேசினாலும் கூட, அவர்களிடம் தோனி குறித்து ஒரு கேள்வியையாவது தொகுப்பாளர் மற்றும் செய்தியாளர்கள் முன் வைத்துவிடுகின்றனர். இதனால் பேட்டியளிப்பவர்களும் தோனி குறித்த கருத்தைப் பேசிவிடுகின்றனர்.
இதற்கு வங்கதேச கிரிக்கெட் வீரர்களும் விதிவிலக்கல்ல. அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான ஷபீர் ரஹ்மான் தன்னுடைய அனுபவங்களை "கிரிக்பென்சி" இணையதளத்துக்குப் பகிர்ந்துள்ளார். அதில் "கடந்த முறை பெங்களூரில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் என்னை ஸ்டம்பிங் செய்து அவுட்டாக்கினார் தோனி. அவருக்கு அதேபோன்றதொரு வாய்ப்பு கடந்தாண்டு உலகக் கோப்பை போட்டியின்போது கிடைத்தது. கிட்டத்தட்ட என்னை அவர் ஸ்டம்பிங் செய்திருப்பார். ஆனால் நான் புத்திசாலித்தனமாக கிரீஸ்க்கு உள்ளே காலை வைத்துத் தப்பித்தேன். பின்பு அவரிடம் "இந்த முறை அல்ல" எனக் கூறினேன்" என்றார்.
தோனி குறித்து மேலும் பேசிய ஷபீர் "ஒரு முறை அவரிடம் உங்கள் பேட்டின் ரகசியம் என்ன ? நீங்கள் சிக்ஸ் அடித்தால் மைதானத்துக்கு வெளியே சென்று விழுகிறது. நாங்கள் அடித்தால் பவுண்டரி கயிற்றைத் தாண்டவே கஷ்டப்படுகிறது என்றேன். அதற்கு அவர் "இது எல்லாவற்றுக்கும் நம்பிக்கைதான் காரணம்" என்றார். நான் அவரிடம் இந்தியாவுக்கு எதிராக விளையாட உங்கள் பேட்டை தாருங்கள் என்றேன். அதற்கு அவர் "பேட்டை நிச்சயம் தருகிறேன் ஆனால் அதனை வைத்து இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடக் கூடாது, மற்ற அணியுடனான போட்டியில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்றார் அவர்.