`Fake Fielding' செய்தாரா விராட் கோலி? கடுப்பான வங்கதேச ரசிகர்கள்! நடந்தது என்ன?

`Fake Fielding' செய்தாரா விராட் கோலி? கடுப்பான வங்கதேச ரசிகர்கள்! நடந்தது என்ன?
`Fake Fielding' செய்தாரா விராட் கோலி? கடுப்பான வங்கதேச ரசிகர்கள்! நடந்தது என்ன?
Published on

பங்களாதேஷ் அணியுடனான போட்டியின்போது விராட் கோலி 'ஃபேக் ஃபீல்டிங்' செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா -வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேச அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. அதிரடியாக ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேசம் அணியின் வெற்றி வாய்ப்பை தட்டிப் பறித்தது மழை.

லிட்டன் தாஸின் அதிரடி ஆட்டத்தால் வங்காளதேச அணி 7 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்திருந்த நிலையில், திடீரென மழை குறுக்கீட்டதால் ஆட்டம் தடைபட்டது. அப்போது டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணியை விட 17 ரன்கள் முன்னிலையில் வங்காளதேச அணி இருந்தது. இதனால் போட்டி கைவிடப்பட்டால் வங்காளதேச அணி வெற்றி பெறும் சூழல் இருந்தது. ஆனால் இந்திய அணிக்கு நல்வாய்ப்பாக மழை நின்றது. இருப்பினும் மழை காரணமாக போட்டி நேரம் தடைபட்டதால் ஓவர்கள் குறைக்கப்பட்டது. அதன்படி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி, வங்காளதேச அணி 16 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதன் மூலம் வெற்றிக்கு 54 பந்துகளில் 85 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மீண்டும் ஆட்டத்தை தொடர்ந்தனர் வங்கதேச பேட்ஸ்மேன்கள். ஆனால் மழை நின்ற பிறகு சுதாகரித்து விளையாடிய இந்திய அணி, தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதால் வங்காளதேச அணி தடுமாற்றம் கண்டது. இதனால் கடைசி ஓவரில் (16வது ஓவர்) அந்த அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட, அர்ஷ்தீப் சிங் வீசிய அந்த ஓவரில் வங்காளதேச அணியால் 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 16 ஓவர்கள் முடிவில் வங்காளதேச அணி 145 ரன்கள் மட்டுமே அடிக்க, இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 'குரூப் 2' பிரிவில் 6 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறி, அரையிறுதி வாய்ப்பை கிட்டதட்ட உறுதி செய்தது.

இதனிடையே, இந்த போட்டியின்போது விராட் கோலி 'ஃபேக் ஃபீல்டிங்' எனப்படும் பேட்ஸ்மேன்களை திசைதிருப்பும் செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அர்ஷ்தீப் சிங் வீசிய 7வது ஓவரில் லிட்டன் தாஸ் அடித்த பந்து அக்சர் படேலை நோக்கிச் சென்றது. ஃபீல்டிங்கில் நின்று கொண்டிருந்த விராட் கோலியை தாண்டி பந்து சென்றபோது, பந்தைப் பிடிக்காமலேயே பந்தைப் பிடித்தது போலவும், ஸ்டம்பை நோக்கி எறிவது போலவும் பாவனை செய்தார். அந்த நேரத்தில் கள நடுவர்கள் இதைக் கவனிக்கவில்லை. இதுதான் தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. விராட் கோலி இப்படி செய்தது ஐசிசியின் 41.5-வது விதிமுறைக்கு முரணானது என வங்கதேச ரசிகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கோலி ஃபேக் ஃபீல்டிங் செய்த விவகாரத்தை போட்டி முடிந்த பிறகு வங்கதேச விக்கெட் கீப்பர் நூருல் ஹசன் எழுப்பினார். செய்தியாளர் சந்திப்பில்  பேசிய அவர், "இதற்கு 5 ரன்கள் தண்டனையாக கொடுத்திருக்கலாம். அது எங்களுக்கு சாதகமாக முடிந்திருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை" என்றார்.

சர்ச்சைக்குள்ளான நோ-பால் முறையீடு

மேலும், இந்த போட்டியின்போது நோ-பால் சர்ச்சையும் வெடித்தது. இந்தியா பேட்டிங் செய்து கொண்டிருக்கையில், ஹசன் மஹ்மூத் வீசிய 16வது ஓவரின் கடைசி பந்தை விராட் கோலி எதிர்கொண்டார் . அப்போது பந்து ஷார்ட் பாலாக வர, ஸ்கொயர் லெக் நடுவரிடம் அதை நோ-பாலாக அறிவிக்கும்படி முறையிட்டார். உடனடியாக வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஓடி வந்து, நடுவரை நோக்கி அதை நோ-பாலாக அறிவிக்கக்கூடாது என்று முறையிட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அப்போது கோலியும், ஷகிப் அல் ஹசனும் சிரித்துக்கொண்டே இருவரும் கட்டித்தழுவினர். இந்தக் காட்சிகள் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இதையும் படிக்கலாமே: டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானை பதம்பார்க்கும் முனைப்பில் தென்ஆப்பிரிக்கா - இன்று பலப்பரீட்சை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com