பிரிஜ் பூஜன் சிங்கிற்கு எதிரான போராட்டம்|வெளியான அதிர்ச்சி தகவல்.. உண்மையை உடைத்த சாக்‌ஷி மாலிக்!

டெல்லியில் கடந்த ஆண்டு நடைபெற்ற மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
பிரிஜ் பூஷன், பபிதா போகத், சாக்‌ஷி மாலிக்
பிரிஜ் பூஷன், பபிதா போகத், சாக்‌ஷி மாலிக்எக்ஸ் தளம்
Published on

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாகவும், அவர்மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரியும் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா மற்றும் சாக்‌ஷி மாலிக் ஆகியோர் அடங்கிய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் குழு கடந்த ஆண்டு தொடக்கம் முதல் டெல்லியில் போராட்டம் மேற்கொண்டது. இது உலக அளவில் கவனம் பெற்றது.

இதைடுத்து புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கிப் பேரணியாகச் செல்லமுயன்ற சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் உள்ளிட்டோரை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தியதோடு, அவர்களை தரதரவென சாலைகளில் இழுத்துச் சென்று கைதும் செய்திருந்தனர்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இதுதொடர்பாக மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரின் அடிப்படையில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

இந்த சூழலில் அண்மையில் முடிந்த ஹரியானா மாநில தேர்தலுக்கு முன்னதாக வினேஷ் மற்றும் பஜ்ரங் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இதில் ஜூலானா தொகுதியில் போட்டியிட்ட வினேஷ் போகத், சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிக்க;மான் வேட்டை வழக்கு|”சல்மான் மன்னிப்பு கேட்க வேண்டும்” - எச்சரிக்கை விடுத்த லாரன்ஸ் பிஷ்னோய் உறவினர்

பிரிஜ் பூஷன், பபிதா போகத், சாக்‌ஷி மாலிக்
காமன்வெல்த் மல்யுத்தம்: பதக்கங்களை அள்ளிய இந்திய வீரர்கள்

மல்யுத்த விளையாட்டிலிருந்து கடந்த ஆண்டு ஓய்வுபெற்ற சாக்‌ஷி மாலிக், ‘விட்னஸ்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இதுதொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “பிரிஜ் பூஷணுக்கு எதிராக மல்யுத்த வீரர்களைப் போராடத் தூண்டியதே, பாஜகவைச் சேர்ந்த பபிதா போகத்-தான். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக வேண்டும் என பபிதா போகத் விரும்பினார். அதற்காகவே பிரிஜ் பூஷணுக்கு எதிராகப் போராட மல்யுத்த வீரர், வீராங்கனைகளை ஒன்று திரட்டினார்.

இப்போராட்டத்திற்கு, காங்கிரஸ் பின்னணியாக இருப்பதாக பலரும் கூறியதில் உண்மையில்லை. மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு பாஜக தலைவர்களான பபிதா போகத், தீரத் ரானா ஆகியோர்தான் காரணம். பபிதா போகத்தின் ஆலோசனையின்படியே, எங்களது போராட்டம் நடத்தப்பட்டது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பில் பாலியல் ரீதியாக பலரும் தொந்தரவுகளுக்கு ஆளாகிய நிலையில், ஒரு பெண் கூட்டமைப்பின் தலைவராக இருந்தால், நன்மை நடக்கும் என நாங்கள் நம்பியிருந்தோம்.

பபிதா போகத்தின் ஆலோசனையின்பேரில் போராட்டம் தொடங்கப்பட்டாலும், முழுவதுமாக அவரை நம்பி செயல்படவில்லை. அவரால் நாங்கள் ஏமாற்றமடைந்தோம். என்றாலும், கூட்டமைப்பிற்குள் பாலியல் துன்புறுத்தல் இருப்பதை அறிந்தே போராட முடிவெடுத்தோம்.

அதேநேரத்தில், சுயநலமாக யோசித்த காரணத்தால் எங்களது போராட்டம் பாதிக்கப்பட்டது. பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத்துக்கு நெருக்கமாக இருந்தவர்களின் பேராசை இதற்குக் காரணம்.

ஆசிய போட்டிக்கான தகுதிச் சுற்றில் இருந்து அவர்கள் இருவரும் விலக்கு பெற்ற முடிவினால் போராட்டத்துக்கு எந்த ஆதாயமும் இல்லை. அது எங்கள் போராட்டத்தின் நோக்கத்தை மாற்றுக் கண்ணோட்டத்தில் பலரையும் தள்ளியது. எங்களது போராட்டத்துக்கு ஆதரவு தந்தவர்களையே நாங்கள் சுயநலத்துக்காக போராடுகிறோமோ என எண்ணச் செய்தது” என அதில் தெரிவித்துள்ளார். மேலும், அவருடைய ‘விட்னஸ்’ புத்தகத்தில் சிறுவயதில் தான் எதிர்கொண்ட பாலியல்ரீதியான துன்புறுத்தல்களையும், மல்யுத்த அமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கின் பாலியல் துன்புறுத்தல்களையும் அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: பாலைவனப் பகுதியில் சிக்கித்தவிப்பு.. உபெர் நிறுவனத்தில் ஒட்டகம் புக்கிங்.. துபாயில் சவாரி செய்த பெண்

பிரிஜ் பூஷன், பபிதா போகத், சாக்‌ஷி மாலிக்
மல்யுத்தம்: தொடரும் பிரச்னைகள்.. திடீரென கலைத்த மத்திய அரசு.. குற்றஞ்சாட்டும் பிரியங்கா காந்தி!

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாகப் பதிலளித்துள்ள பாஜக தலைவர் பபிதா போகத், ”தனது புத்தகத்தை விற்பதற்காக என்மீது குற்றஞ்சாட்டியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

அதுபோல் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சட்டப்பேரவை உறுப்பினர் வினேஷ் போகத், “எதற்கு பேராசைப்பட வேண்டும். இதுகுறித்து நீங்கள் அவரிடம்தான் (சாக்ஷி மாலிக்) கேட்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேசிய விவசாயிகள் பிரிவு தலைவரான பஜ்ரங் புனியா, ”சாக்‌ஷி மாலிக் தெரிவித்திருப்பது அவருடைய சொந்த கருத்து. அவர் சொன்னது பற்றி என்னால் கருத்து சொல்ல முடியாது. அவர், என்னுடைய தோழி. அவர், அப்படியே தொடர்வார்” எனப் பதிலளித்துள்ளார்.

2014-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்ற பபிதா போகத், 2019ஆம் ஆண்டு பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். பிறகு, அதே ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், தாத்ரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவி இருந்தார்.

அதேபோல், சமீபத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்குப் பின்னர் வினேஷ் போகத்துடன் பஜ்ரங் புனியாவும் காங்கிரஸில் இணைந்தார். அவருக்கும் சமீபத்தில் நடைபெற்ற ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேசிய விவசாயிகள் பிரிவுத் தலைவராக மட்டும் அவர் நியமிக்கப்பட்டார்.

இதையும் படிக்க: கர்வா சவுத்| நடிகை மியா கலிஃபா புகைப்படத்தை வைத்து விரதத்தை முடித்த முதியவர்.. கிளம்பிய எதிர்ப்பு!

பிரிஜ் பூஷன், பபிதா போகத், சாக்‌ஷி மாலிக்
உ.பி.| “நாட்டின் மகள்கள் தோற்றனர்; பிரிஜ் பூஷன் வென்றார்" வைரலாகும் சாக்‌ஷி மாலிக்கின் வருத்தப்பதிவு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com