நடப்பு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 474 ரன்கள் குவித்துள்ளார்.
உலகக் கோப்பை போட்டியின் லீக் சுற்றுப் போட்டிகள் நாளையுடன் முடிவடைகிறது. பாகிஸ்தான் அணி தன்னுடைய இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியுடன் இன்று விளையாடி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்தது. இமாம்-உல்-ஹாக் 100, பாபர் அசாம் 96 ரன்கள் எடுத்தனர். அசாம் 4 ரன்னில் சதத்தை நழுவ விட்டார். பாகிஸ்தான் அணி தன்னுடைய அரையிறுதி வாய்ப்பினை இழந்துவிட்டது.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் மிகப்பெரிய தூணாக இருந்தவர் பாபர் அசாம் தான். 8 போட்டிகளில் விளையாடி 3 அரைசதம், ஒரு சதம் உட்பட 474 ரன்கள் குவித்துள்ளார். மூத்த வீரர்களாக ஹபீஸ் (253), சர்பராஸ் அகமது (139), சோயிப் மாலிக் 8 என ஏமாற்றம் அளித்தபோதும் இவர் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தார்.
24 வயதே ஆன பாபர் அசாம் பாகிஸ்தான் அணியின் 27 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். அதாவது, பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். 1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜவேத் மியான்தத் 437 ரன்கள் அடித்ததே இதுவரை அதிகமாக இருந்து வந்தது. ஒரு வேளை பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைந்திருந்தால் மேலும் ஒரு போட்டியில் அல்லது இறுதிப் போட்டி வரை சென்றிருந்தால் இரண்டு போட்டிகளில் விளையாடியிருக்க முடியும். அப்படி விளையாடியிருந்தாலு அவர் இன்னும் கூடுதலாக ரன்கள் அடித்திருக்க முடியும்.
பாபர் அசம் 71 ஒருநாள் போட்டிகளில் 69 இன்னிங்சில் விளையாடி 3117 ரன்கள் குவித்துள்ளார். 14 அரைசதம், 10 சதம் அடித்துள்ளார். இவரது பேட்டிங் சராசரி 52.83 ரன். இந்திய அணிக்கு கேப்டன் விராட் கோலியைப் போல், பாகிஸ்தானுக்கு பாபர் அசாம் திகழந்து வருகிறார்.