உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், பாபர் அஸாமின் அபார சதத்தால், பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை தொடரின் 33வது லீக் போட்டியில், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் குப்தில் 5 ரன்களிலும் முன்ரோ 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்த வந்த கேப்டன் வில்லியம்சன் நிலைத்து நின்று விளையாட, அவருடன் ஜோடி சேர்ந்த ராஸ் டைலர் 3 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் வந்த விக்கெட் கீப்பர் டாம் லதாம் 1 ரன் மட்டும் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் நியூசிலாந்து அணி 46 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் கேப்டன் வில்லியம்சன் நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்த நினைத்தார். அவரும் 41 (69) ரன்களில் அவுட் ஆக, 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி பரிதாப நிலையை அடைந்தது.
பின்னர் ஜோடி சேர்ந்த ஆல் ரவுண்டர்கள் நீஷம் மற்றும் கிராண்ட்ஹோம் பொறுப்புடன் விளையாடி ரன்களை உயர்த்தினர். இருவரும் அசத்தலாக அரைசதம் அடிக்க, 200 ரன்களை கடந்தது அந்த அணி. ஸ்கோர் 215 ரன்களாக இருந்தபோது, கிராண்ட்ஹோம் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது. இறுதி வரை ஆட்டமிழக்காத நீஷம் 97 (112) ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் அணியில் சிறப்பாக பந்து வீசிய ஷாஹீன் ஷா அஃப்ரிதி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர் வெற்றி பெற 238 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கியது பாகிஸ்தான் அணி. தொடக்க ஆட்டக்காரர்கள் இமாம் உல் ஹக் 19 ரன்களிலும், பஹார் ஜமான் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த பாபர் அஸாமும் அனுபவ வீரர் ஹபீஸும் நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். ஸ்கோர் 110 ஆக இருந்த போது, ஹபீஸ் 32 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்ததாக பாபருடன், ஹரிஸ் சோஹைல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய பாபர் தனது 10வது சதத்தை பதிவு செய்தார். கடைசியில் வெற்றிபெற 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹரிஸ் சோஹைல் 68 ரன்களில் ரன் அவுட் ஆனார். முடிவில், பாகிஸ்தான் அணி 49.1 ஒவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாபர் 101 (127) ரன்களும், சர்ப்ராஸ் அகமது 5(3) ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதன் மூலம் நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்து அணி தனது முதல் தோல்வியை சந்தித்துள்ளது.