ஒரு நாள் போட்டிகளில் இருந்து பாக். வீரர் ஓய்வு!

ஒரு நாள் போட்டிகளில் இருந்து பாக். வீரர் ஓய்வு!
ஒரு நாள் போட்டிகளில் இருந்து பாக். வீரர் ஓய்வு!
Published on

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அசார் அலி, ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அசார் அலி. 33 வயதான இவர், அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார். கடந்த ஆண்டு பதவியில் இருந்து விலகினார். சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 59 ரன்கள் எடுத்து அந்த அணி வெற்றிபெற உதவியவர்.

கடந்த சில மாதங்களாக மோசமான ஃபார்ம் காரணமாக அந்த அணியின் ஒரு நாள் போட்டிகளில் சேர்க்கப்படாமல் இருந்தார். அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்ட இமாம் உல் ஹக் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவர் கழற்றிவிடப்பட்டார். கடைசியாக நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்றிருந்தார், அசார் அலி.

இந்நிலையில் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.  இதுபற்றி அவர் கூறும்போது, ‘நன்றாக யோசித்த பிறகே இந்த முடிவை எடுத்துள்ளேன். பாகிஸ்தான் அணியில் ஒரு நாள் போட்டியில் சிறப்பான வீரர்கள் இருக்கிறார்கள். இளம் வீரர்களுக்கு வழிவிட்டு இந்த முடிவை எடுத்துள்ளேன். 

அடுத்து உலகக் கோப்பை போட்டி வர இருக்கிறது. கோப்பையை வெல்ல பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இனி டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன். பாகிஸ்தான் அணியின் கேப்டனாகவும் எனக்கு நல்ல நினைவுகள் உள்ளன. இந்த முடிவை மகிழ்ச்சியுடனேயே எடுத்துள்ளேன்’ என்றார். 

53 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள அசார் அலி, 1845 ரன்கள் எடுத்துள்ளார். இதில் மூன்று சதங்களும் 12 அரை சதங்களும் அடங்கும். அதிகப்பட்சமாக 102 ரன்கள் எடுத்துள்ளார். இவரது சராசரி 36.9
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com