ஐசிசி நடத்தை விதிகளை மீறியதற்காக ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயினுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் டிம் பெயின் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நடத்தை விதிகளை மீறியமைக்காக போட்டியின் சம்பளத்தில் 15 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் சிட்னி மைதானத்தில் விளையாடிய போது நடைபெற்றுள்ளது.
கள நடுவரின் முடிவோடு பெயின் முரண்பட்டுள்ளதால் அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. சிட்னி போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பேட் செய்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த இன்னிங்ஸின் 56வது ஓவரை நாதன் லயன் வீசியுள்ளார். ஸ்ட்ரைக்கில் புஜாரா இருந்துள்ளார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் ஃபிராண்ட் ஃபுட் ஆட முயன்ற போது பந்தை மிஸ் செய்துள்ளார். இருப்பினும் LBW அவுட் கொடுக்க மறுத்துவிட்டார் நடுவர் பால் வில்சன். அவரது முடிவை எதிர்த்து ஆஸ்திரேலியா DRS ரிவ்யூவை எடுத்தது.
இருப்பினும் ரிவ்யூ முடிவு ஆஸ்திரேலியாவுக்கு பாதகமாக அமைந்தது. உடனடியாக கடுப்பான ஆஸ்திரேலியா கேப்டன் பெயின் நடுவரிடம் சென்று அது குறித்து வாதிட்டுள்ளார். “நான் முன்றாவது அம்பயர் இல்லை” என நடுவர் சொல்லியுள்ளார். உடனடியாக பீப் போடும் அளவிற்கு வாதிட்டுள்ளார் பெயின். அது ஸ்டெம்பில் இருந்த மைக்கில் பதிவாகியுள்ளது. இந்த விவகாரம் ஆட்ட நடுவரின் கவனத்திற்கு செல்ல பெயினுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தனது தவறை பெயினும் ஏற்றுக்கொண்டுள்ளார்.