ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல் பங்கேற்றார். இதில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி, தரவரிசையில் 31-வது இடத்திலுள்ள அலெக்ஸாண்டர் பப்லிக்கை முதல்சுற்றில் எதிர்கொண்டார்.
2 மணி நேரம் 38 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில், சுமித் நாகல் 6-4, 6-2, 7-6 [7-5] என்ற செட் கணக்கில் வீழ்த்தி 2ஆவது சுற்றுக்கு முன்னேறினார். ஆடவர் ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் தொடரில் தரவரிசையின்படி முதல் 100 இடங்களுக்குள் இடம்பெற்ற வீரர் ஒருவரை தோற்கடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார் சுமித்.
இந்த நிலையில், தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் சுமித் நாகல், சீனாவின் ஜுன்செங் ஷாங் எதிர்கொண்டார். இதில் சுமித் நாகல் 2-6, 6-3, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். முதல்சுற்றில் அலெக்ஸாண்டர் பப்லிக்கை வீழ்த்தி உலகையே திரும்பிப் பார்க்கவைத்த நாகல், இந்தப் போட்டியில் தோல்வியுற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தது.