இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மழை காரணமாக 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் பங்கேற்கின்றன. அடிலெய்டில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது. புஜாரா முதல் இன்னிங்ஸில் சதம் அடித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 71 ரன்கள் எடுத்தார்.
2-வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் இன்று நடக்கிறது. போட்டி நடக்கும் ஆப்டஸ் மைதானம் புதிதாகக் கட்டப்பட்டது. இங்கு நடக்கும் முதல் டெஸ்ட் போட்டி இது. ஆஸ்திரேலியாவின் 10-வது டெஸ்ட் மைதானமான இதன் பிட்ச், வேகமானதாகவும் பந்து பவுன்ஸ் ஆகும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சாளர்கள் மிரட்டுவார்கள்.
முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற தெம்புடன் இந்தப் போட்டியில் இந்திய அணி களமிறங்குகிறது. இதிலும் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைக்க இந்திய அணி துடித்துக்கொண்டிருக்கிறது. அதே நேரம் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வியால், அதிர்ச்சி அடைந்துள்ள ஆஸ்திரேலிய அணி, இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதனால் இந்த டெஸ்ட் போட்டியும் பரபரப்பாக இருக்கும்.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. அந்த அணியில் கடந்த போட்டியில் விளையாடிய வீரர்களே இடம்பெற்றுள்ளனர். மாற்றம் இல்லை.
இந்திய அணியில் ரோகித் சர்மா, அஸ்வினுக்குப் பதிலாக விஹாரியும் உமேஷ் யாதவும் சேர்க்கப்பட்டுள்ளனர். விஹாரி சுழல் பந்தும் வீசுவார் என்பதால் தனியாக சுழற்பந்துவீச்சாளர் இல்லாமல் இந்திய அணி களமிறங்குகிறது.
இந்திய அணி விவரம்:
விராத் கோலி, முரளி விஜய், கே.எல்.ராகுல், புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷாப் பன்ட், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, பும்ரா, உமேஷ் யாதவ்.
ஆஸ்திரேலிய அணி:
ஆரோன் பின்ச், மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்கோப்ம், டிராவிஸ் ஹெட், டிம் பெய்ன். மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், நாதன் லைன், ஹசல்வுட்.