நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 247 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இந்தப் பயணத்தில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இரண்டாவது போட்டியிலும் 247 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை சுருட்டி கோப்பையை வென்றுள்ளது.
கடந்த 26ஆம் தேதி தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 155.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 467 ரன்கள் குவித்தது. அந்த அணியில் டிராவிஸ் ஹெட் 114 (234) ரன்கள் குவித்தார். பின்னர் முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 54.5 ஓவர்களில் 148 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து 2வது இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 54.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்து டிக்ளர் செய்தது. பின்னர் 2வது இன்னிங்ஸ் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 71 ஓவர்களில் 240 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 247 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியில் சதம் அடித்த டிரவிஸ் ஹெட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.