இந்திய அணிக்கெதிரான 4ஆவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 137 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.
தர்மசாலாவில் நடந்து வரும் இந்த போட்டியின் மூன்றாவது நாளான இன்று முந்தைய நாள் ஸ்கோருடன் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 332 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லியோன் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதையடுத்து, 32 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 137 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணியில் 6 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். குறிப்பாக கடைசி 3 வீரர்களும் ரன் கணக்கைத் தொடங்காமலேயே பெவிலியன் திரும்பினர். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ், அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 106 ரன்களை இலக்காகக் கொண்டு இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடி வருகிறது.