கிரிக்கெட் உலகின் ஜாம்பவனான முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே காலமானார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், சுழற்பந்து வீச்சில் தனி முத்திரை பதித்தவரும், வர்ணனையாளருமான ஷேன் வார்னே காலமாகியுள்ளார். தாய்லாந்தில் அவரது பங்களாவில் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாரடைப்பு காரணமாக உயிரிழந்து இருக்கலாம் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்காக 15 ஆண்டுகள் விளையாடிய வார்னே 145 டெஸ்ட போட்டிகளில், 708 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது வீரர் ஆவார். டெஸ்ட் கிரிக்கெட்டில் முரளிதரனுக்குப் பிறகு அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய லெஜண்டரி ஸ்பின்னரான ஷேன் வார்ன் வர்ணனையில் சிலபல நுணுக்கமான, நுட்பமான கிரிக்கெட் தகவல்களை எப்போதும் சொல்வார். கேப்டன்சி, களவியூகம் பந்து வீச்சு மாற்றம், மட்டையாளர்களின் பலவீனம் போன்றற தகவல்களுடன் வர்ணனை செய்பவர். ஐபிஎல் டி20 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.
கடந்த 2007- ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். ஷேன் வார்னேவின் திடீர் மரணம் கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் ஷேன் வார்னே தன் மகன் ஜேக்சனுடன் 300 கிலோ எடை கொண்ட பைக்கில் மெல்போர்னில் சென்று கொண்டிருந்தபோது விபத்து நடந்தது. இந்த விபத்தால் கடும் வலி ஏற்படவே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.