பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, கேப்டவுணில் நடந்து வருகிறது. நேற்று முன்றாம் நாள் ஆட்டம் நடந்தது.
அப்போது, ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் கேமருன் பேன்கிராஃப்ட், ஏதோ ஒரு மஞ்சள் நிற பொருளை பந்தில் பயன்படுத்தியது கேமராவில் சிக்கியது. பின்னர் அதை குளோசப்பில் பார்த்தால், அந்தப் பொருளை வைத்து அவர் பந்தை சேதப்படுத்தியது தெரிய வந்தது. அது ஒரு மஞ்சள் டேப் என்று தெரிந்தது.
பின்னர் இந்த விவகாரம் நடுவர்களிடம் கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது கருப்பு துணியை மட்டும்தான் வைத்திருந்தேன் என்றும் வேறு பொருள் இல்லை என்றும் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பேன்கிராஃப்ட், தனது தவறை ஒப்புக்கொண்டார். அணியில் உள்ள முக்கிய வீரர்கள் சிலர் திட்டமிட்டே இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார். இந்த தவறு தமக்கு தெரிந்தே நடந்ததாகக் கூறிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் இனி தமது தலைமையில் இதுபோன்ற சம்பவம் தொடராது எனக் கூறினார். இதனிடையே இந்த செயலுக்கு, சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறும்போது, ’இது திட்டமிடப்பட்ட ஏமாற்று வேலை. மோசமான சீட்டிங். இது அவமானம். யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. உலகிலேயே சிறந்த பந்துவீச்சை கொண்ட அணி, ஆஸ்திரேலிய அணி. அப்படி இருக்கும்போது இப்படி ஏமாற்றி வெற்றிப்பெற முயன்றிருக்கக் கூடாது. நான் ஆஸ்திரேலியாவின் தனிப்பட்ட வீரர் பற்றியோ, கேப்டன் பற்றியோ கருத்துக் கூற விரும்பவில்லை. கேப்டன்ஷிப்பில் இருந் து ஸ்மித் ராஜினாமா செய்ய வேண்டுமா என்பது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் அந்த டிவி காட்சியைப் பார்த்ததும் எமோஷனாகிவிட்டேன். இப்படி செயல்படுவது ஒரு தலைமைக்கு சரியானதல்ல’ என்றார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் ரோட்னி ஹாக், ‘ஸ்மித் உடனடியாக பதவி விலக வேண்டும்’ என்று கூறியுள்ளார்.