இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்து விமர்சனத்துக்கு உள்ளானது. மேலும், தனது தாயாரின் உடல்நலக்குறைவால் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் நாடு திரும்பிய நிலையில், 3-வது டெஸ்ட் போட்டியை ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் கடுமையான நெருக்கடிகளுக்கிடையில் அந்த அணி எதிர்கொள்ள தயாரானது.
இந்தூரில் கடந்த 1-ம் தேதி துவங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வுசெய்ததையடுத்து துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். ஆனால், இடது கை ஆர்த்தடக்ஸ் பந்து வீச்சாளர் மேத்யூ குன்மேன் (5 விக்கெட்டுகள்) மற்றும் ஆஃப் ஸ்பின் பௌலரான நாதன் லயனின் (3) பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், முதல் இன்னிங்சில் இந்திய அணி 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அவுட்டானது. இந்தியா சார்பில் அதிகப்பட்சமாக விராட் கோலி (22) மற்றும் சுப்மன் கில் (21) ஆகியோர் அதிக ரன்கள் எடுத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர், ஹாண்ட்ஸ்கோம்ப் 7 ரன்களுடனும், க்ரீன் 6 ரன்களுடனும் இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய ஆஸ்திரேலிய அணி, மதிய இடைவேளைக்கு முன்னதாகவே உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் பந்துவீச்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 197 ரன்கள் மட்மே சேர்த்தது.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி, லயனின் சுழலில் சிக்கி 163 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இந்தியா சார்பில் புஜாரா மட்டுமே நிலைத்து ஆடி, 142 பந்துகளை சந்தித்து 59 ரன்கள் சேர்த்திருந்தார். அவருடன் கூட்டணி அமைத்திருந்த ஸ்ரேயாஸ் அய்யரும் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணியில் லயன் 8 விககெட்டுகளையும், ஸ்டார்க் மற்றும் குன்மேன் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.
76 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி 3-ம் நாள் மதிய இடைவேளைக்கு முன்னதாகவே ஒரு விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஏற்கனவே ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி, ஜூன் மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வென்று தொடரை கைப்பற்றினால் மட்டுமே இந்திய அணி டெஸட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும்.