இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் 1 - 0 என முன்னிலை வகிக்கிறது ஆஸ்திரேலியா. கோலி இந்தியா திரும்பியுள்ள காரணத்தினால் ரஹானே அணியை கேப்டனாக வழிநடத்தினார். டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அந்த அணிக்காக மேத்யூ வேடும், ஜோ பேரன்ஸும் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர். இருவரும் ஆஸ்திரேலியாவிற்கு நல்ல தொடக்கத்தை கொடுப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில் ஐந்தாவது ஓவரிலேயே பும்ராவின் வேகத்தில் டக் அவுட்டானார் பேர்ன்ஸ். தொடர்ந்து வேட் மற்றும் ஸ்மித் அஷ்வின் சுழலில் சிக்கி விக்கெட்டை இழந்தனர். இதில் ஸ்மித் டக் அவுட்டானார் என்பது குறிப்பிடத்தக்கது.
சரிந்த அணியை மார்னஸ் லபுஷேன் மற்றும் டிராவிஸ் ஹெட் மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர். இருப்பினும் அவர்களால் 86 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. ஹெட், லபுஷேன், கேமரூன் கிரீன், டிம் பெய்ன், ஸ்டார்க், நாதன் லயன், கம்மின்ஸ் என ஆஸ்திரேலிய வீரர்கள் சீரிய இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். முடிவில் 72.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 195 ரன்களை குவித்தது ஆஸ்திரேலியா. அந்த அணிக்காக மார்னஸ் லபுஷேன் அதிகபட்சமாக 48 ரன்களை குவித்திருந்தார்.
இந்திய அணி சார்பில் பந்து வீசிய பும்ரா (4 விக்கெட்), அஷ்வின் (3 விக்கெட்), சிராஜ் (2 விக்கெட்) மற்றும் ஜடேஜா (1 விக்கெட்) வீழ்த்தினர். இதில் அறிமுக வீரர் சிராஜ் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.
தொடர்ந்து முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணிக்காக அறிமுகம் வீரர் சுப்மன் கில்லும், மயங்க் அகர்வாலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் ரன் எதுவும் சேர்க்காமல் LBW முறையில் அவுட்டனார். தொடர்ந்து புஜாரா கிரீஸுக்கு வந்தார். அவருடன் இணைந்து இன்னிங்க்ஸை கட்டமைத்தார் இளம் வீரர் கில்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 11 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்த நிலையில் 36 ரன்களை குவித்துள்ளது இந்தியா. சுப்மன் கில்லும், புஜாராவும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணியை விட 159 ரன்கள் இந்தியா இப்போது பின்தங்கியுள்ளது. முதல் நாள் ஆட்டத்தை பொருத்தவரை மயங்கின் விக்கெட்டை தவிர்த்து ஆட்டம் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா டாஸை இழந்திருந்தாலும் இந்த நாள் பொன் நாளாகவே அமைந்துள்ளது.
நன்றி : BCCI, CRICKET AUSTRALIA