டி-20 கிரிக்கெட் வரலாற்றில், அதிக ரன்களை விட்டுக்கொடுத்து சாதனை படைத்துள்ளார் இலங்கை பந்துவீச்சாளர் கசுன் ரஞ்சிதா.
இலங்கை கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டி அடிலெய்டில் இன்று நடந்தது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி, இலங்கை பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து 2 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் குவித்தது. கேப்டன் ஆரோன் பின்ச் 36 பந்துகளில் 64 ரன்களும் மேக்ஸ்வெல் 28 பந்துகளில் 62 ரன்களும் டேவிட் வார்னர் 100 ரன்களும் எடுத்தனர். பின்னர், களமிறங்கிய இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
இந்தப் போட்டியில், இலங்கை பந்துவீச்சாளர் கசுன் ரஞ்சிதா, 4 ஓவர்கள் வீசி 75 ரன்களை விட்டுக்கொடுத்தார். இதன் மூலம் சர்வதேச டி-20 வரலாற்றில் அதிக ரன்களை வாரி வழங்கிய வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார். இதற்கு முன், செஸ் குடியரசுக்கு எதிரான போட்டியில் துருக்கியின் துனஹன் துரன் 70 ரன்கள் விட்டுக் கொடுத்ததிருந்ததே மோசமான சாதனையாக இருந்தது. அதை முறியடித்திருக்கிறார் கசுன் ரஞ்சிதா.