முதல் டி-20 போட்டியில், இலங்கை அணிக்கு 233 ரன்களை, ஆஸ்திரேலிய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டி-20 போட்டி, அடிலெய்டில் இன்று காலை தொடங்கியது.
டாஸ் வென்ற இலங்கை கேப்டன் லசித் மலிங்கா, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் ஆரோன் பின்ச்-சும் டேவிட் வார்னரும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். இருவரும் இலங்கை பந்துவீச்சை துவம்சம் செய்தனர். வார்னர் 28 பந்துகளில் அரைசதம் விளாசினார்.
சிக்சர்களாகவும் பவுண்டரிகளாகவும் பறக்கவிட்ட ஆரோன் பின்ச், 36 பந்துகளில் 64 ரன்கள் எடுத்த நிலையில் சண்டகன் பந்துவீச்சில் மெண்டிஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதில் மூன்று சிக்சர்களும் எட்டு பவுண்டரிகளும் அடங்கும். அடுத்து மேக்ஸ்வெல், வார்னருடன் இணைந்தார். இருவரும் பவுண்டரியும் சிக்சருமாக மிரட்ட, என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தார், இலங்கை கேப்டன் மலிங்கா. பந்துவீச்சாளர்களை மாற்றி மாற்றிப் பார்த்தும் பலனில்லை.
9.4 ஓவரில் 100 ரன்களை கடந்த ஆஸ்திரேலிய அணி, 17.3 ஓவர்களில் 200 ரன்களை தொட்டது. மேக்ஸ்வெல் 22 பந்துகளில் அரை சதம் அடித்து, இலங்கை பந்துவீச்சாளர்களை வியப்படைய வைத்தார். கடைசி ஓவரில், ஷனகா வீசிய பந்தில் பெரேரா விடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார், மேக்ஸ்வெல். நின்று தாண்டவம் ஆடிய அவர், 28 பந்துகளில் 3 சிக்சர், 7 பவுண்டரி யுடன் 62 ரன்கள் குவித்தார். அடுத்து டர்னர் வந்தார்.
கடைசி ஓவரின், கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து சதமடித்தார் வார்னர். அவர் 56 பந்துகளில் 4 சிக்சர், 10 பவுண்டரிகளுடன் இந்த சதத்தை பூர்த்தி செய்தார். சர்வதேச டி-20 போட்டியில் இது அவரது முதல் சதம். ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி, 2 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்துள்ளது.
அடுத்து இலங்கை அணி பேட்டிங் செய்ய உள்ளது.