AUSvsSA: உலகக்கோப்பையில் புது வரலாறு படைக்குமா தென்னாப்பிரிக்க மகளிர் அணி?

AUSvsSA: உலகக்கோப்பையில் புது வரலாறு படைக்குமா தென்னாப்பிரிக்க மகளிர் அணி?
AUSvsSA: உலகக்கோப்பையில் புது வரலாறு படைக்குமா தென்னாப்பிரிக்க மகளிர் அணி?
Published on

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள், இன்று டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மகளிர் டி20 உலகக்கோப்பையானது விறுவிறுப்பான அரையிறுதிப்போட்டிகளை கடந்து தற்போது கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அரையிறுதிப்போட்டியில் இந்திய அணியானது, பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக போராடி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. மற்றொரு அரையிறுதிப்போட்டியில் தொடர் முழுக்க தோல்வியையே சந்திக்காமல் வந்த இங்கிலாந்து அணியை, 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, யாரும் எதிர்பார்க்காத வகையில் இறுதிப்போட்டியில் அடியெடுத்து வைத்தது தென்னாப்பிரிக்க அணி.

கோப்பையே வென்றதில்லை என்பதை மாற்றி அமைக்குமா மகளிர் தென்னாப்பிரிக்க மகளிர் அணி?

தென்னாப்பிரிக்காவை பொறுத்தவரையில் ஆடவர் அணியாக இருந்தாலும் சரி, மகளிர் அணியாக இருந்தாலும் சரி, நாக் அவுட் போட்டிகளில் தோல்வியடைந்து வெளியேறி, கோப்பையையே கைப்பற்றியதில்லை என்ற பெயரை, காலம் காலமாக பெற்று வருகின்றனர்.

2000, 2014, 2017 ஆண்டுகளில் 3 முறை அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய மகளிர் தென்னாப்பிரிக்க அணி, அரையிறுதிப்போட்டிகளில் படுதோல்வியை சந்தித்து வெளியேறியது. இந்நிலையில் தற்போது 4ஆவது முறையாக ஐசிசி தொடரில் அரையிறுதிப்போட்டியை எட்டியது. அதில் வெற்றிபெற்ற நிலையில், முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. இதிலும் வென்று, “நாக் அவுட் சோக்கர்ஸ்” என்னும் அடைமொழியை தென்னாப்பிரிக்க மகளிர் அணி மாற்றியமைக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

2014 உலகக்கோப்பை தோல்விக்கு பழிதீர்த்த தென்னாப்பிரிக்க மகளிர் அணி!

இதில் 2014ஆம் ஆண்டு ஒருமுறை மட்டும் தான் தென்னாப்பிரிக்க மகளிர் அணி, டி20 உலகக்கோப்பையில் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெற்றிருந்தது. அப்போது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை சந்தித்த இங்கிலாந்து அணி, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டாமினேட் செய்து வீழ்த்தியது. இந்நிலையில் அந்த படுதோல்விக்கு பழிதீர்க்கும் விதமாக, இந்த 2023 டி20 உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காத இங்கிலாந்து அணியை அரையிறுதியில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது தென்னாப்பிரிக்க அணி.

ஒட்டுமொத்தமாக ஒரே ஒரு யு-19 கோப்பையை மட்டும் தான் கையில் ஏந்தியுள்ளது தென்னாப்பிரிக்கா!

கிரிக்கெட் விளையாட தொடங்கி இத்தனை ஆண்டுகாலம் வரை, பலமுறை அரையிறுதி சுற்றுகளுக்கும், சிலமுறை இறுதி சுற்றுகளுக்கும் தகுதிபெற்றுள்ள தென்னாப்பிரிக்க அணி, கோப்பையையே வென்றதில்லை என்னும் மோசமான சாதனையையே தனது தோல்களில் சுமந்து வருகிறது. எய்டன் மார்க்ரம் தலைமையில் மட்டும் தான் 2014ஆம் ஆண்டின் யு-19 உலகக்கோப்பையை மட்டும் ஒரேஒரு முறை வென்றுள்ளது தென்னாப்பிரிக்க அணி.

தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா பைனல் போட்டி எங்கே? எப்போது?

2023ஆம் ஆண்டு மகளிர் டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியானது தென்னாப்பிரிக்காவில், கேப்டவுன் நகரில் நடைபெற உள்ளது. இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில், சொந்த மைதானத்தை பயன்படுத்தி கோப்பையை வெல்லும் முனைப்பில் களம்காணுகிறது தென்னாப்பிரிக்க அணி. இதுவரை 7 முறை உலகக்கோப்பை டைட்டிலை அடித்திருக்கும் ஆஸ்திரேலிய அணி, 8ஆவது கோப்பையையும் வெல்லும் முயற்சியில் களமிறங்குகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com