மெல்போர்னில் கடும் மழை: தாமதமாகிறது இந்திய அணியின் வெற்றி!

மெல்போர்னில் கடும் மழை: தாமதமாகிறது இந்திய அணியின் வெற்றி!
மெல்போர்னில் கடும் மழை: தாமதமாகிறது இந்திய அணியின் வெற்றி!
Published on

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 2 விக்கெட்டுகளே தேவை என்ற  நிலையில் ஐந்தாவது நாள் ஆட்டம் மழையால் தடை பட்டுள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில், 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. புஜாரா அபார சதம் அடித்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. பிட்ச்சின் தன்மை முற்றிலும் மாறியதால் அந்த அணி வீரர்களால் நிலைத்து நின்று ஆட முடியவில்லை. விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. இதனால் அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 151 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய தரப்பில் பும்ரா, 6 விக்கெட் வீழ்த்தினார். 

இதையடுத்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. மயங்க் அகர்வால் 42 ரன்னும் ரிஷாப் 33 ரன்னும் எடுத்தனர். அணியின் ஸ்கோர், 8 விக்கெட் இழப்புக்கு 106 ஆக இருந்தபோது டிக்ளேர் செய்தார் இந்திய கேப்டன் விராத்.

ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 6 விக்கெட்டையும் ஹசல்வுட் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர். முதல் இன்னிங்சின் 292 ரன்கள் முன்னிலையுடன் சேர்த்து இந்திய அணி, 399 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 

பின்னர் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஹாரிஸ் 13 ரன் எடுத்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் மயங்க் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்ச் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார். இதையடுத்து உஸ்மான் கவாஜாவும் ஷான் மார்ஷும் ஆடி வந்தனர். உணவு இடைவேளை வரை, 14 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 44 ரன் எடுத்திருந்தது. பின்னர் ஷமி, கவாஜாவை (33 ரன்)யும் பும்ரா ஷான் மார்ஷை (44)யும் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 34 ரன் எடுத்த நிலையில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் போல்டானார். அடுத்து மிட்செல் மார்ஷூம் கேப்டன் டிம் பெய்னும் இணைந்தனர். மிட்செல் 10 ரன்னிலும் டிம் பெய்ன் 26 ரன்னிலும் பெவிலியன் திரும்ப, அந்த அணியின் ஸ்கோர் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்னாக இருந்தது. 

இதனால் நான்காவது நாளான நேற்றே ஆஸ்திரேலிய வீரர்களின் அனைத்து விக்கெட்டும் விழுந்துவிடும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. இதனால் இந்திய வீரர்களும் உற்சாகத்தில் திளைத்தனர். ஆனால், அவர்களின் கனவை கொஞ்சம் தள்ளி வைத்தார் கம்மின்ஸ். அவர் நிதானமாக ஆடினார். மறு முனையில் மெதுவாக ஆடிய ஸ்டார்க் 18 ரன்னில் அவுட் ஆக, இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 2 விக்கெட்டும் ஆஸ்திரேலிய அணிக்கு 141 ரன்னும் தேவை என்ற நிலையில் நேற்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ஐந்தாவது நாள் ஆட்டம் இன்று தொடங்குவதாக இருந்தது. ஆனால், அங்கு கடும் மழை பெய்து வருவதால் ஆட்டம் தடை பட்டுள்ளது. இதனால் இந்திய அணியின் வெற்றி தாமதமாகியுள்ளது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com