வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்துள்ளது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விராட் கோலி 87 ரன்களுடனும், ஜடேஜா 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தப் போட்டியில் களமிறங்கியதன் மூலம் விராட் கோலி 500 சர்வதேச போட்டிகளில் விளையாடிய 4வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அதேபோல் 500-வது போட்டியில் களமிறங்கிய வீரர்களில் இதுவரை ஒருவர் கூட அரைசதம் அடித்ததில்லை. இப்போட்டி மூலம் விராட் கோலி 500வது போட்டியில் அரைசதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் 6வது இடத்தில் இருந்த விராட் கோலி, ஐந்தாவது இடத்தில் இருந்த காலிஸ் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட் கீப்பரும், தற்போது விளையாடும் லெவன் அணியில் இடம்பெற்றிருப்பவருமான ஜோஸ்வா டா சில்வா மைதானத்தில் வைத்தே, "விராட் கோலி பேட்டிங்கை பார்க்கத்தான் இன்று மேட்சுக்கு வருவதாக என் அம்மா என்னிடம் கூறினார். நீங்கள் 100 ரன் அடிக்க அடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் விராட்" என்றார்.
இதற்கிடையே விராட் கோலி அவரிடம் “நீங்கள் என்னுடைய சாதனைகள் மீது அவ்வளவு தீவிரமாக (Obsessed) இருக்கிறீர்கள்!” எனசொல்லியிருக்கிறார். அதற்கு ஜோஸ்வா “ஆமாம், எனக்கு தெரியும். எனக்கு நீங்கள் 100 ரன் அடிக்க வேண்டும்” என்றுள்ளார். இந்த உரையாடல் ஸ்டம்ப் மைக்கில் பதிவான நிலையில், இந்த ஃபேன் பாய் சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, இப்போட்டி இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையே நடைபெறும் 100-வது டெஸ்ட் போட்டி என்பதால் இரு அணி வீரர்களும் ஒன்றாக குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதன் பிறகு இந்திய அணிக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா, ரோகித் சர்மாவுக்கு அந்த சிறப்பு நினைவுப் பரிசை வழங்கினார்.