'நாங்க கெளம்ப ரெடியாகிட்டோம்' ஆனா அவங்க இரண்டு பேர்! - ஹேமங் பதானி பகிர்ந்த தகவல்!
2001இல் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அரங்கேறிய சுவராஸ்யமான சம்பவம் ஒன்றை தற்போது ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார் முன்னாள் பேட்ஸ்மேன் ஹேமங் பதானி.
கடந்த 2001-ம் ஆண்டில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் 3 விக்கெட் இழப்புக்கு 115 ரன்களில் தத்தளித்த நிலையில், ராகுல் டிராவிட்டுடன் கைகோர்த்து விவிஎஸ் லக்ஷ்மண் மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடங்கினார். விவிஎஸ் லஷ்மன் மற்றும் ராகுல் டிராவிட்டும் இணைந்து 376 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் குவித்து அசத்தினர்.
விவிஎஸ் லக்ஷ்மண் முச்சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 281 ரன்களில் ஆட்டமிழந்தார். மேலும் டிராவிட் 181 ரன்களில் வெளியேறினார். இருவரும் அபாரமாக செயல்பட்டதால்தான், இந்திய அணி ஃபாலோ ஆன் பெற்றும் வெற்றியைப் பெற்று, தொடரையும் கைப்பற்றியது.
இந்நிலையில் இந்த போட்டியில் அரங்கேறிய சுவராஸ்யமான சம்பவம் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார் முன்னாள் பேட்ஸ்மேன் ஹேமங் பதானி. “எப்படியும் தோல்வியடைந்து விடுவோம் என்று மூன்றாவது நாள் முடிவில் நாங்கள் அனைவரும் எங்கள் சூட்கேஸ்களை பேக் செய்து விட்டோம். இன்றே (3வது நாள்) விமான நிலையத்திற்கு செல்ல வேண்டியதுதான் என்று அனைவரும் நினைத்திருந்தோம். அப்போதுதான் விவிஎஸ் லஷ்மன் மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் அன்றைய நாள் முழுவதும் ஒரு விக்கெட் கூட இழக்கமால் மேஜிக்மேன் போல் பேட் செய்தனர்” என்று பதானி ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.