19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகின்றன. கடந்த செப். 23ஆம் தேதி தொடங்கிய இப்போட்டிகள் அக்டோபர் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. 61 பிரிவுகளில் நடைபெறும் 40 விளையாட்டுப் போட்டிகளில், 45 நாடுகளைச் சேர்ந்த 12 ஆயிரம் வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவில் இருந்து 38 விளையாட்டுகளில் மொத்தம் 634 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
சீனாவில், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய வீரர், வீராங்கனைகள் தங்களது அபார திறமைகளை வெளிப்படுத்தி சாதனை படைத்து வருகின்றனர். இதன்மூலம் இந்தியா, பதக்க வேட்டையையும் நடத்திவருகிறது. பல விளையாட்டுப் பிரிவுகளில் இந்தியா பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் ஆசிய விளையாட்டுப் பிரிவில் இன்று (அக். 4) ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவில் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா கலந்துகொண்டார். அவர், 88.88 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். முன்னதாக, நீரஜ் சோப்ரா, ஈட்டியை வெகுதூரம் தூக்கி எறியும் முதல் முயற்சியை மேற்கொண்டார். ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்தத் தூரத்தைப் பதிவுசெய்ய முடியவில்லை எனக் குழுவினரால் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்தே அவர் இரண்டாவது முறையாக அவர் வீசினார். அதிலும் சக வீரரை வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்து தங்கத்தை வேட்டியாடினார். இதன்மூலம் அவர் இரண்டாவது முறையாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வேட்டையாடி உள்ளார். சக வீரர் கிஷோர் குமார் ஜேனா 87.54 மீட்டர் தூரம் வீசி இரண்டாம் இடம்பிடித்தார்.
இதையும் படிக்க: ”தொந்தரவு செய்யாதீர்கள்” - வேண்டுகோள் விடுத்த விராட் கோலி, அனுஷ்கா சர்மா!
ஹரியானாவின் பானிபட்டில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த நீரஜ் சோப்ரா, இளம்வயதிலேயே ஈட்டி எறிதலில் ஆர்வம்கொண்டு, அதற்கேற்ப, தன்னை மெருகேற்றியபடி, தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளிலும் ஜொலிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து 2016-இல் நடைபெற்ற ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் வெள்ளியையும், உலக ஜூனியர் போட்டியில் தங்கத்தையும், தெற்காசிய விளையாட்டில் தங்கத்தையும் வேட்டையாடினார்.
அதன்பின்னர், 2017-இல் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கத்தையும், 2018இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கத்தையும், அதே ஆண்டில் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கத்தையும் வேட்டையாடினார். தொடர்ந்து, 2021இல் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கத்தை வென்றார். இந்த ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற 7 பதக்கங்களில் ஒரே ஒரு தங்கம் நீரஜ் சோப்ரா வென்றதாகும்.
அடுத்து, 2022இல் நடைபெற்ற டயமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப் தொடரிலும் முதலிடம் பிடித்து அசத்தினார். அடுத்து, யூஜின் நகரில் நடைபெற்ற உலக தடகளப் போட்டியிலும் அவர் வெள்ளியை வென்றார். தவிர, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று 88.77 தூரத்துக்கு ஈட்டியை எறிந்து 2024 ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். இதன்மூலம், உலக ஈட்டி எறிதல் வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கிறார் நீரஜ்.
கடந்த மே மாதம், அவர் அதிகபட்சமாக 89.94 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து சாதனை படைத்தார். இது தேசிய அளவிலான சாதனையாகும். தற்போது ஆசிய விளையாட்டிலும் மீண்டும் தங்கம் வென்று தாயகத்தின் பெருமையை தலைநிமிரச் செய்ததுடன், இந்திய தடகள வரலாற்றின் அடையாளமாகவும் மாறியிருக்கிறார்.