ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரான ஜெய் ஷாவின் பதவிக்காலம், 2024-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக, வங்கதேச கிரிக்கெட் தலைவர் நஸ்முல் ஹசன் பதவியில் இருந்துவந்த நிலையில், அவரது பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரான ஜெய் ஷா, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் கூட்டத்தில் 32 வயதே ஆன ஜெய் ஷா தலைவராக தேர்வாகி பதவி வகித்து வந்தார். இதன் மூலம் மிக இளம் வயது தலைவர் என்ற சிறப்பையும் அவர் படைத்து இருந்தார். இந்நிலையில், அவரின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா மற்றும் அவரது நிர்வாகக் குழுவினரின் பதவிக்காலம் வருகிற 2024-ம் ஆண்டு வரை நீட்டிக்க, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுப்பினர்கள் ஒருமனதாக முடிவெடுத்துள்ளனர். இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற வருடாந்திர கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜெய் ஷாவின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் தொடரவுள்ளது.
மேலும், ஆசியக் கோப்பை டி20 போட்டிகளை இந்தாண்டு இலங்கை கிரிக்கெட் வாரியம் தலைமையில் நடக்கிறது. இந்தப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் 24 நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் அங்கம் வகிக்கின்றன.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய ஐந்து நாடுகள் இந்த கவுன்சிலின் முக்கிய உறுப்பினர்கள் ஆவர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஒரே மகன்தான் இந்த ஜெய் ஷா என்பது குறிப்பிடத்தக்கது.