துபாயில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த சவுரவ் கங்குலி " ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா சிறப்பாக விளையாடி வருகிறது. அதனால்தான் அவர்கள் அரையிறுதியில் தகுதிப்பெற்றுள்ளனர். மகளிர் உலகக் கோப்பையை வெல்லும் அணியை கணிக்க முடியவில்லை. இந்தியா கோப்பையை வெல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றார்.
முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா தோற்றது குறித்து பேசிய கங்குலி "இதற்கு முன்பும் தோல்வியில் இருந்து மீண்டு வந்திருக்கோம். நிச்சயமாக இந்திய அணி மீண்டு வரும் என்பதை திடமாக நான் நம்புகிறேன். பாகிஸ்தானுடன் பொதுவான நாட்டில் விளையாடுவதில் இந்தியாவுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எனவே துபாயில் நடக்க இருக்கும் ஆசியக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானும் இந்தியாவும் நிச்சயம் விளையாடும்" என்றார் அவர்.