”அந்த 174 ரன்கள்! ஹாங்காங் அணியை சாதாரணமாக நினைக்காதீர்கள்” - எச்சரிக்கும் வாசிம் ஜாஃபர்!

”அந்த 174 ரன்கள்! ஹாங்காங் அணியை சாதாரணமாக நினைக்காதீர்கள்” - எச்சரிக்கும் வாசிம் ஜாஃபர்!
”அந்த 174 ரன்கள்! ஹாங்காங் அணியை சாதாரணமாக நினைக்காதீர்கள்” - எச்சரிக்கும் வாசிம் ஜாஃபர்!
Published on

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 27 ஆம் தேதி தொடங்கிய நிலையில், போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. B பிரிவில் இருக்கும் ஆப்கானிஸ்தான் அணி இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் அபாரமாக விளையாடி 7 விக்கெட்டுகள் மற்றும் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்நிலையில், ஏ பிரிவில் இருக்கும் இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனது முதல் ஆட்டத்தில் சமபலத்தில் இருக்கும் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. இன்று தனது 2வது போட்டியில் இந்திய அணி இளம் வீரர்களை கொண்ட ஹாங்காங் அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது.

ஐசிசி டி20 தரவரிசையில் 20 வது இடத்தில் இருக்கும் ஹாங்காங் அணிக்கு எதிரான இப்போட்டி விராட் கோலி தனது இயல்பான பார்முக்கு வருவதற்கு ஏற்ற போட்டியாக பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 34 பந்துகளை எதிர்கொண்டு 35 ரன்களை விளாசிய கோலி, அரைசதம் விளாசி அதிரடியை துவங்குவார் என எதிர்பார்த்த நிலையில் அவுட்டாகி ரசிகர்களுக்கு வழக்கம்போல ஏமாற்றத்தையே அளித்தார்.

விராட் கோலிக்கு சரியான கம்பேக்காக இந்த போட்டி அமையக்கூடும் என வாசின் ஜாஃபர் தெரிவித்துள்ளார். “நான் நம்புகிறேன். நாங்கள் அனைவரும் அவரிடம் இருந்து ஒரு பெரிய இன்னிங்ஸை விரும்புகிறோம். டி20 கிரிக்கெட்டில் அவர் சதம் அடிப்பார் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது, ஆனால் விராட் கோலியின் 60-70 ரன்கள் என்ற பெரிய இன்னிங்ஸைக் காண வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

தனிப்பட்ட முறையில், நான் அவரது அட்டகாசமான ஆட்டத்தை மீண்டும் பார்க்க விரும்புகிறேன். 2016-17ல் அவர் விளையாடிய விதம், அந்த ஆட்டத்தை நாங்கள் இதுவரை பார்த்ததில்லை. அது மீண்டும் வரும் என்று நம்புகிறேன், அந்த 60-70 நாக் வந்தால், அவரது தன்னம்பிக்கை அதிகரிக்கும்” என்று தெரிவித்தார் வாசிம் ஜாஃபர்.

மேலும் எதிர்த்து விளையாடும் அணியை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். “ஹாங்காங்கிற்கு எதிரான கடைசி போட்டியில் ஷிகர் தவானின் 127 ரன்கள் உதவியுடன் 286 ரன்களை குவித்தது இந்திய அணி. அடுத்து களமிறங்கிய ஹாங்காங் அணி ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்புக்கு 174 ரன்களை குவித்து இந்திய அணிக்கு கிலியை ஏற்படுத்தியது. ஆனால் இறுதியில் இந்தியா 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டி20 கிரிக்கெட் சிறிய வடிவம் என்பதால் சில ஓவர்களுக்குள் ஆட்டம் முழுமையாக மாறிவிடும். இந்தியா இந்த விளையாட்டை இலகுவாக எடுத்துக் கொள்ளும் என்று நான் நினைக்கவில்லை. அவர்களும் அவ்வாறு எடுத்துக் கொள்ள கூடாது. இந்திய அணி வெற்றியில் இருந்து வருகிறது. எனவே அதைத் தொடர விரும்புவார்கள். இந்திய அணி தனது பாதுகாப்பை வலுவாக வைத்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்.” என்றும் தெரிவித்தார் வாசிம் ஜாஃபர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com