ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் அனைத்துப் போட்டிகளையும் வெல்லும் முனைப்புடன் இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்டில் நாளை தொடங்குகின்றன. நாளை தொடங்கி செப்டம்பர் 28ம் தேதி வரை நடைபெறுகிறது. நாளை நடைபெறும் முதல் போட்டியில் வங்கதேசம், இலங்கை அணிகள் மோதுகின்றன. செப்டம்பர் 18ம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் ஹாங்காங் அணியை இந்தியா எதிர்கொள்கிறது. அதற்கு அடுத்த நாளே பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.
ஆசியக் கோப்பை தொடருக்காக இந்திய வீரர்கள் துபாயில் இன்று பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சியின் போது இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி மற்றும் பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் இருவரும் சந்தித்து பேசிக் கொண்டனர்.
கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ரோகித் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. இந்நிலையில், போட்டி குறித்து ரோகித் பேசுகையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளதாக கூறினார். மேலும், “முதல் முறையாக ஒரு முழு தொடருக்கு நான் கேப்டனாக பொறுப்பேற்கிறேன். இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஒவ்வொரு அணியும் கோப்பையை வெல்ல முயற்சிக்கும். ஒவ்வொரு அணிக்கும் ஒரு பலம் உள்ளது. இதுமிகவும் போட்டி நிறைந்த தொடராக இருக்கும். இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்” என அவர் தெரிவித்துள்ளார்.